சந்தி சிரித்தபின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர் : வைரமுத்துவை கலாய்க்கும் தமிழிசை

 

சந்தி சிரித்தபின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர் : வைரமுத்துவை கலாய்க்கும் தமிழிசை

சின்மயி விவகாரத்தில் பதிலளித்துள்ள வைரமுத்து சந்தி சிரித்தபின் சந்திக்கிறேன் என்கிறார் என்று தமிழிசை சௌந்தராஜன் கருத்து  தெரிவித்துள்ளார்.

சென்னை: சின்மயி விவகாரத்தில் பதிலளித்துள்ள வைரமுத்து சந்தி சிரித்தபின் சந்திக்கிறேன் என்கிறார் என்று தமிழிசை சௌந்தராஜன் கருத்து  தெரிவித்துள்ளார்.

திரையுலகில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில், பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக  பின்னணி பாடகி சின்மயி,  கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.  இந்தக் குற்றச்சாட்டு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த ஒரு வாரகாலமாக இது குறித்து அமைதி காத்து வந்த வைரமுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ,’ என் மீது கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மையில்லை. உண்மை இருந்தால் வழக்கு தொடரலாம். சந்திக்கத் தயார். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். அசைக்கமுடியாத ஆதாரங்களைத் திரட்டி வைத்துள்ளேன்.  நான் நல்லவனா? கெட்டவனா? என்பதை இப்போது யாரும் முடிவு செய்ய வேண்டாம். நீதிமன்றம் முடிவு செய்யட்டும். நீதிக்குத் தலை வணங்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வைரமுத்துவின் இந்தப் பதிவை பற்றி பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘சந்தி சிரித்தபின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர் …நிந்திக்க அவகாசம் கொடுத்து ஒரு வாரம் கழித்து சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன?சந்தக்கவிஞர்மீது சந்தேகமே அதிகரிக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.