சந்திரயான் 2 ஆர்பிட்டர் ஆயுட்காலம் திட்டமிட்டத்தை காட்டிலும் நீடிக்கும்….. இஸ்ரோவின் சந்தோஷமான செய்தி

 

சந்திரயான் 2 ஆர்பிட்டர் ஆயுட்காலம் திட்டமிட்டத்தை காட்டிலும் நீடிக்கும்….. இஸ்ரோவின் சந்தோஷமான செய்தி

சந்திரயான் 2 ஆர்பிட்டரின் ஆயுட்காலம் திட்டமிட்டத்தை காட்டிலும் நீடிக்கலாம் என இஸ்ரோ சந்தோஷமான செய்தியை அறிவித்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே நிலவில் இறங்கி சாதனை படைத்துள்ளன. இந்நிலையில், நம் நாடும் அந்த சாதனை படைக்கும் நோக்கில் சந்திரயான் 2 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியது. விஞ்ஞானிகளின் பல ஆண்டு கடின உழைப்பால் சந்திரயான் 2 உருவானது. கடந்த ஜூலை 22ம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான் 2ல் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் என 3 பகுதிகள் உள்ளன. 

இஸ்ரோ

சந்திரயான் 2 திட்டமிட்டப்படி தனது பயணத்தை தொடர்ந்தது. நிலவின் சுற்றுவட்டப்பாதையில் ஆர்பிட்டர் சாட்டிலைட் பிரித்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து சந்திரயான் 2 விக்ரம் லேண்டரை நிலவில் இறக்கும் பணியை இஸ்ரோ மேற்கொண்டது. நேற்று அதிகாலை நிலவில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கி.மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

இதனால் சந்திரயான் 2 மிஷன் பின்னடைவை சந்தித்தது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் சோகத்தில் மூழ்கினர். சந்திரயான் 2 மிஷன் பின்னடைவை சந்தித்தாலும் 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. ஏனென்றால் சந்திரயான் 2ன் ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருகிறது. அது திட்டமிட்டப்படி சரியாக செயல்பட்டு வருகிறது.

சந்திரயான் 2 மேக்கிங்

இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளனர். அதாவது துல்லியமான வெளியீடு மற்றும் பணி மேலாண்மை உதவியால் ஆர்பிட்டரின் ஆயுட்காலம் 7 மடங்கு அதிகரிக்கலாம். இதன் வாயிலாக நிலவின் பரிமாணம், அதன் கனிமங்கள் மற்றும் துருவ பிராந்தியங்களில் நீர் மூலக்கூறுகள் குறித்து நாம் ஆய்வு செய்ய முடியும். இந்த ஆர்பிட்டரில் உள்ள கேமராவின் தொழில்நுட்பதிறன் மற்ற நிலவு மிஷன்களில் இருந்ததை காட்டிலும் சிறந்தது  என தெரிவித்தனர். ஆர்பிட்டரின் ஆயுட்காலம் 12 மாதங்கள் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அதனை 7 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.