சந்திரபாபு நாயுடுவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: அமித்ஷா உறுதி

 

சந்திரபாபு நாயுடுவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: அமித்ஷா உறுதி

தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவுகள் இனி ஒருபோதும் சந்திரபாபு நாயுடுவுக்கு திறக்காது என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உறுதி தெரிவித்துள்ளார்

அமராவதி: தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவுகள் இனி ஒருபோதும் சந்திரபாபு நாயுடுவுக்கு திறக்காது என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உறுதி தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின், 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் – பாஜக கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது.

தேர்தல் சமயத்தில் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதி உதவியும் அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை.

இதனால், கடும் அதிருப்தியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, பாஜக கூட்டணியில் இருந்து விலகினார். மேலும் எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை பலப்படுத்தும் முயற்சிகளில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பாஜக கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவுகள் இனி ஒருபோதும் சந்திரபாபு நாயுடுவுக்கு திறக்காது என்றார்.

மேலும் பேசிய அவர், மத்தியில் வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைந்தபோது சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வந்து இணைந்தார். 2004-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கூட்டணிக்கு சென்றார். பின்னர்  2014-ஆம் ஆண்டில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தார். இப்போது காங்கிரஸை ஆதரிக்கிறார். தெலங்கானாவில் கூட்டணி அமைத்து தோல்வியை தழுவினார். எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கும். அப்போது அவர் எங்களுடன் கூட்டணி அமைக்க மீண்டும் முயற்சி செய்வார். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணிக் கதவுகள் இனி ஒரு போதும் அவருக்கு திறக்காது என்றார்.