சந்திரபாபு நாயுடுவிற்கு வெற்றி கிடைக்கும்: வைகோ நம்பிக்கை

 

சந்திரபாபு நாயுடுவிற்கு வெற்றி கிடைக்கும்: வைகோ நம்பிக்கை

சந்திரபாபு நாயுடுவின் முயற்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி கிடைக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருச்சி: சந்திரபாபு நாயுடுவின் முயற்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி கிடைக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற  தேர்தலில் பாஜகவை வீழ்த்த, பிரம்மாண்ட கூட்டணி அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சியினர் இறங்கியுள்ளனர். குறிப்பாக, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இதற்கான பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்திய சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரை நேற்று சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியக திமுக தலைவர் ஸ்டாலினையும் சந்தித்து அவர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், ஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாலும், அதை இயக்கக்கூடிய இந்துத்துவா சக்திகளாலும் நாட்டின் ஜனநாயகம், பன்முகத்தன்மைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. கூட்டாட்சி தத்துவத்துக்கு வழி ஏற்படுத்தும் நோக்கில் மாநில கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சந்திரபாபு நாயுடு, சரத்பவார்,பரூக் அப்துல்லா ஆகியோர் முயற்சித்து வருகின்றனர்.

இதற்காக சந்திரபாபு நாயுடு தமிழ்நாட்டுக்கு வந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியது நம்பிக்கை ஊட்டுகிறது. சந்திரபாபு நாயுடு போன்றோர் எடுக்கும் முயற்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி கிடைக்கும். மாநில கட்சிகளின் கூட்டமைப்பும், காங்கிரஸ் கட்சியும் இணையும் அரசு, இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்கும் அரசாக இருக்கும் என்றார்.