சதுரகிரியில் தைலக் கிணறு எங்கே உள்ளது ?

 

சதுரகிரியில் தைலக் கிணறு எங்கே உள்ளது ?

சதுரகிரியில் மறைவாக இருப்பதாய் கருதப்படும் தைலக் கிணறு பற்றி போகர் சித்தர் அவர்கள் கூறிய விளக்கங்களை பற்றி பார்போம்.

திசைக்கு நான்கு மலைகள் என்று பதினாறு மலைகள் சமமாகவும், சதுரமாகவும் அமைந்திருப்பதால் இதற்கு சதுரகிரி என்று பெயர் வந்தது. இந்த மலையானது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு மலையாகும். இங்கு அமைந்திருக்கும் கோயிலை தரிசிப்பதற்காக பக்தர்கள் திரளாக வருகின்றனர்.

sathuragiri

மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு விருதுநகர் வத்திராயிருப்பு பகுதியிலிருந்து செல்வது எளிமையான பாதை ஆகும் . இங்கே உள்ள மலைகோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆகிய இரண்டு சுயம்பு லிங்கங்கள் உள்ளன.

பெரும்பாலான பக்தர்கள் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை சித்ரா பௌணர்மி, சிவராத்திரி, மார்கழி மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் அதிகமாக வருகின்றனர்.

மூலிகைகள் நிறைந்த மலைக் குன்று ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. அந்த மலைக்கு சஞ்சீவி மலை என்று பெயர். மேலும் சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்களுக்கும் கோயிலும் அமைந்துள்ளது.

sathuragiri

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சதுரகிரி மலையில் அமைந்துள்ள பிலாவடி கருப்பண்ண சாமி கோயிலின் பின்னால் இருப்பதாக கூறப்படும் தைலக் கிணற்றை இதுவரை யாரும் கண்டறிந்து கூறியதாக தெரியவில்லை.

இரசவாதம் செய்வதற்கு தேவையான மூலிகை குழம்பின் மிகுதி இந்த கிணற்றுக்குள் கொட்டப்பட்டு அதற்கு காவல் தெய்வங்களை சித்தர்கள் நியமித்ததாகவும், அந்த காவல் தெய்வங்கள் இந்த கிணற்றை சாமானியர்களின் பார்வையில் இருந்து மறைத்து வைத்திருப்பதாகவும் மட்டுமே நமக்கெல்லாம் சொல்லப் படுகிறது. 

பல்வேறு சித்தர்களின் பாடல்களில் இந்த தைலக் கிணறு குறித்த தகவல்கள் காணப்பட்டாலும், போகர் அருளிய போகர் ஜெனன சாகரம் என்கிற நூலில் காணப்படும் தகவல் கொஞ்சம் வித்தியாசமானது. தைலக் கிணற்றின் அமைப்பு மற்றும் சூழலை விவரிக்கிறது பின்வரும் பாடல்…

sathuragiri

“ஆமடா குகையொன்று வுள்ளேபோகு
மாயிரம்பேர் சித்தரப்பா அதிலிருப்பார்
வாமடா காலாங்கி யையர்நின்று
வல்லவொரு கற்பமெல்லா மங்கேதின்றார்
ஓமடா வெந்தனுக்குங் கற்பமீந்தார்
உயர்ந்ததொரு தயிலமெல்லா மங்கேயீந்தார்
நாமடா வதிலிருந்துச் சித்திபெற்று
சென்றுபார் காதமற் கப்பலாக
வாச்சரியம் பெரியதாகப் பாறையொன்று”
“ஆமென்ற பாறையிலே குழிதானுண்டுமதில்
நல்லதொரு தயிலமெல்லா மூடினேனே
மூனேன் கருப்பனையங் காவல்வைத்து
முதலான பொருள்வேண்டு மென்றோர்க்கெல்லாம்
தெடினே னென்றுசொல்லித் தெளிந்துவந்தால்
திறம்பார்த்து யிருக்குமிடஞ் செப்புமென்றேன்”

– போகர் –

பெரிய குகை ஒன்றில் அதில் ஆயிரம் சித்தர்களுக்கு மேல் இருப்பார்கள் என்றும். அங்கேதான் காலங்கிநாதர் தங்கி பல்வேறு கற்பங்களை சாப்பிட்டார் என்றும் .

காலங்கிநாதர் அரிய பல தைல வகைகளை போகர் அவர்களுக்கு தந்ததாகவும். நானும் அங்கிருந்து சித்தியடைந்தேன் என்றும் போகர் கூறுகிறார். கப்பல் போல இருக்கும் பெரிய பாறை இருக்கிறது. 

அந்த பாறையில் இருக்கும் ஒரு குழியில் இந்த அரிய தைலத்தை எல்லாம் போட்டு மூடினேன் என்கிறார் போகர்.இந்த குழிக்கு கருப்பனை காவல் வைத்திருக்கிறேன் என்கிறார்.

sathuragiri

உண்மையான தேடல் உள்ளவர்கள் தெளிந்து இங்கே வந்தால் அந்த கிணற்றை காட்டச் சொல்லியே கருப்பனை காவலுக்கு வைத்தேன் என்கிறார் போகர்.

வெறுமனே கருப்பண்ண சாமி கோயிலின் பின் புறம் கிணற்றை தேடுவதை விட அந்த பகுதியில் ஆயிரம் பேர் தங்குமளவு பெரிய குகையும், அங்கேயோ அல்லது பக்கத்திலோ கப்பல் மாதிரியான பாறையும் இருக்கிறதா என தேடினால் இந்த கிணற்றை கண்டறிய வாய்ப்பு உள்ளது. 

sathurgiri

இத்தனை சித்தர்கள் ஓரிடத்தில் கூடி என்ன செய்திருப்பார்கள்,ஒருவேளை அந்த இடம் ஒரு ஆய்வுக் கூடமாகவோ அல்லது சித்தர்கள் தங்களின் கண்டறிதல்களை பரிசோதித்துப் பார்க்கும் பரிசோதனை கூடமாகவோ இருந்திருக்கலாம். 

போகரின் வாக்குப் படி தூய உள்ளத்துடன் கருப்பன்ண சாமியை வணங்கி இந்த தேடலை தொடர்ந்தால் தைலக் கிணற்றின் ரகசியம் தெரிய வரலாம் என்று மேற்குறிய பாடல் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.