சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கு: மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி

 

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கு: மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்ய கோரிய மாறன் சகோதரர்களின் மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது

மதுரை: சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்ய கோரிய மாறன் சகோதரர்களின் மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது, அதிவேகம் கொண்ட அதிகளவிலான பி.எஸ்.என்.எல்.,தொலைபேசி இணைப்புகளை சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கும், அங்கிருந்து, சன் தொலைகாட்சி நிறுவனத்துக்கும் சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறி, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்பட 7 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ நீதிமன்றம் மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடத்திய நீதிமன்றம், சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டதுடன், இவர்கள் 7 பேரும் விசாரணை நீதிமன்றத்தை அணுகி வழக்கை சந்திக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

மேலும் ,சிபிஐ நீதிமன்றம் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மீண்டும் பதிவு செய்து சாட்சி விசாரணையைத் தொடங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யக்கோரி மாறன் சகோதரர்கள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு மீதான தீர்ப்பை இன்று வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்ய கோரிய மாறன் சகோதரர்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், குற்றச்சாட்டுகளை புதிதாக பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.