சட்டம் – ஒழுங்கு அறிக்கை கேட்டு கேரள முதல்வருக்கு ஆளுநர் உத்தரவு

 

சட்டம் – ஒழுங்கு அறிக்கை கேட்டு கேரள முதல்வருக்கு ஆளுநர் உத்தரவு

கேரளாவில் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆளுநர் சதாசிவம் உத்தரவிட்டுள்ளார்.

திருவனந்தபுரம்: கேரளாவில் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆளுநர் சதாசிவம் உத்தரவிட்டுள்ளார். 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீர்ப்புக்கு இந்து அமைப்புகள், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால், சபரிமலையில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு போடப்பட்டு, போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் அமல்படுத்தப்பட்டிருக்கும் தடை உத்தரவை ஜனவரி 5-ம் தேதி வரை கேரள அரசு நீட்டித்துள்ளது. 

இதற்கிடையே, 21 நாள் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பலத்த பாதுகாப்புக்கு இடையே கடந்த டிசம்பர் 30-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. இந்த பூஜை வருகிற ஜனவரி 14-ம் தேதி நடைபெறவுள்ளது. ஜனவரி 20-ம் தேதி கோயில் நடை சாத்தப்படுகிறது.

இந்த சூழலில் நேற்று அதிகாலை 3.45 மணியளவில் கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய 40 வயதுடைய இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசித்துவிட்டு திரும்பினர்.

கேரளா முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேரள அரசைக் கண்டித்து போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு பாஜக-வும் ஆதரவு தெரிவித்துள்ளது. அதன்படி, கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. 

இந்த போராட்டத்தின் போது, சில கட்டடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. ஆட்டோக்கள் அடித்து நொறுக்கப்பட்டன். ஆங்காங்கே போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஆக மாறியது. இதனால் கேரளா முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு நிலை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு மாநில ஆளுநர் சதாசிவம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தொடர் போராட்டம் காரணமாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தமக்கு புகார்கள் வந்துள்ளதாகவும், அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக இருப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் எனவும் பினராயி விஜயனுக்கு சதாசிவம் அறிவுறுத்தியுள்ளார்.