சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்கு எதிரான மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது- உச்ச நீதிமன்றம்

 

சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்கு எதிரான மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது- உச்ச நீதிமன்றம்

சட்டப்பிரிவு 370 நீக்கம் தொடர்பான குடியரசு தலைவரின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியது.

கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ நீக்கி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகளை கொடுத்து வந்த 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளை மத்திய அரசு நீக்கியது. மேலும், ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலம் இனி லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக செயல்படும் என அறிவித்தது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பூர்வமாக ரத்து ஆனது.

ராம் நாத் கோவிந்த்

இந்நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ குடியரசு தலைவர் ரத்து செய்தற்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை வழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவர் தொடர்ந்து இருந்தார். 

காஷ்மீர்

அந்த மனுவில், சட்டப்பிரிவு 370ஐ குடியரசு தலைவர் ரத்து செய்தது சட்டத்துக்கு புறம்பானது. ஜம்மு அண்டு காஷ்மீர் சட்டப்பேரவையின் அனுமதி இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. குடியரசு தலைவரின் உத்தரவை  எதிர்த்து பாகிஸ்தான் அரசும் மற்றும் சில காஷ்மீர் மக்களும் ஐ.நா.வில் முறையிட போவதாக கூறியுள்ளனர். அவர்கள் ஐ.நா.வுக்கு சென்றால், இந்திய அரசியலமைப்பின் திருத்தத்துக்கு ஐ.நா. தடை விதிக்க முடியும் என அதில் கூறப்பட்டு இருந்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதி என்.பி. ரமணா தலைமையிலான அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது. சரியான நேரத்தில் வழக்கு விசாரிக்கப்படும் என்று நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.