சட்டத்திற்கு விரோதமாக 3 பேர் விடுதலை செய்யப்படவில்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம்

 

சட்டத்திற்கு விரோதமாக 3 பேர் விடுதலை செய்யப்படவில்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம்

பேருந்து எரிப்பு வழக்கில் அதிமுகவினர் 3 பேரும் சட்டத்திற்கு விரோதமாக விடுதலை செய்யப்படவில்லை என அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கமளித்துள்ளார்.

சென்னை: பேருந்து எரிப்பு வழக்கில் அதிமுகவினர் 3 பேரும் சட்டத்திற்கு விரோதமாக விடுதலை செய்யப்படவில்லை என அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கமளித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2000-ம் ஆண்டு, டான்சி வழக்கில் கைது செய்யப்பட்டதை கண்டித்து தருமபுரி அருகே வேளாண் கல்லூரி பேருந்தை அதிமுகவினர் தீ வைத்து எரித்ததில் அப்பாவி கல்லூரி மாணவிகள் மூன்று பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்விவகாரத்தில் அதிமுகவை சேர்ந்த நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் இருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்ய  தமிழக அரசு அளித்த பரிந்துரையை ஏற்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை விடுதலை செய்ய தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், இவர்கள் மூவரும் சிறையில் இருந்து விடுதலையாக உள்ளனர். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரைத்தும் நடவடிக்கை எடுக்காத ஆளுநர் 3 மாணவிகளை எரித்து கொன்றவர்களை விடுதலை செய்ய ஒத்துக்கொண்டிருப்பது சர்ச்சையையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. மேலும் ஆளும் அரசு தனது கட்சிக்காரர்களுக்காக ஆளுநருக்கு பெரிய அளவில் அழுத்தம் கொடுத்தது ஆனால் 7 பேர் விவகாரத்தில் உரிய அழுத்தம் கொடுக்கவில்லை எனவும் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், மூன்று பேர் விடுதலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தருமபுரி பேருந்து எஇரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 3 பேரும் சட்டவிதிகளின்படியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சட்டவிரோதமாக விடுதலை செய்யப்படவில்லை. 3 பேர் விடுதலையில் சாதி, மதம், அரசியல் இல்லை.

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்ற எந்த சட்டமும் இல்லை. 7 பேர் விவகாரத்தில் அவர் நல்ல முடிவெடுப்பார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். அவரிடம் இதுகுறித்து மீண்டும் பரிந்துரைப்பதா என ஆலோசித்து முடிவெடுப்போம் என்றார்.