சச்சின் சாதனையை முறியடித்தார் கிங் கோலி: குறைந்த இன்னிங்ஸில் 10,000 ரன்கள் குவித்து சாதனை

 

சச்சின் சாதனையை முறியடித்தார் கிங் கோலி: குறைந்த இன்னிங்ஸில் 10,000 ரன்கள் குவித்து சாதனை

ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸில் 10,000 ரன்கள் குவித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கேப்டன் விராட் கோலி முறியடித்துள்ளார்

விசாகப்பட்டிணம்: ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸில் 10,000 ரன்கள் குவித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கேப்டன் விராட் கோலி முறியடித்துள்ளார்.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இன்றைய போட்டியில், 81 ரன்கள் சேர்த்தால், விரைவாக 10 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி நிகழ்த்துவார் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. இதுவரை, 204 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கோலி, 9,919 ரன்கள் குவித்திருந்தார். அதேபோல், 259 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனை இதுவரையும் முறியடிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், தனது 205-வது இன்னிங்ஸான, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான இன்றைய போட்டியில் 10 ஆயிரம் ரன்களை குவித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

இன்றைய போட்டியில் 81 ரன்களை கடந்த போது இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார். இதன் மூலம் 17 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 36 சதம் 49 அரை சதங்களுடன் விராட் கோலி 10 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், கங்கூலி, டிராவிட், தோனி ஆகியோர் ஏற்கனவே 10,000 ரன்களை கடந்துள்ளனர். தற்போது அந்த பட்டியலில் 13-வது வீரராக விராட் கோலி இணைந்துள்ளார்.