‘சசிகலா தான் கூற வேண்டும்’ – ஆளுநரை சந்தித்த பின் கே.பி.முனுசாமி பேட்டி

 

‘சசிகலா தான் கூற வேண்டும்’ – ஆளுநரை சந்தித்த பின் கே.பி.முனுசாமி பேட்டி

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் என்ன இருக்கிறது என்பதை சசிகலா தான் கூற வேண்டும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

சென்னை: ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் என்ன இருக்கிறது என்பதை சசிகலா தான் கூற வேண்டும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். 

இந்த மர்ம மரணங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூவிடம், கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான சயான் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று ஆளுநரை சந்தித்த ஸ்டாலின், இந்த விவகாரத்தை சிறப்பு புலனாய்வு விசாரித்திட வேண்டும் என்றும், கொலை பழிக்கு ஆளாகி இருக்கும் முதல்வர் பழனிசாமியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். 

இந்நிலையில், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி இன்று ஆளுநரை சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் விளக்கினோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் எங்களுக்கு சாதகமான பதிலை கூறினார். கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுநரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான்” என தெரிவித்துள்ளார். 

மேலும், கொடநாட்டில் என்ன இருக்கிறது என்பதை சசிகலா தான் கூற வேண்டும் என்றும் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.