சசிகலாவுக்கு சலுகை… அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்: ரூபா அதிரடி

 

சசிகலாவுக்கு சலுகை… அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்: ரூபா அதிரடி

சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் அளித்த சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என சிறைத்துறையின் முன்னாள் டிஐஜி கூறியுள்ளார்.

பெங்களூரு: சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் அளித்த சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என சிறைத்துறையின் முன்னாள் டிஐஜி கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் அவரது உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு டிஐஜி ரூபா புகார் தெரிவித்தார். அதனை சிறைத்துறை உயரதிகாரிகள் மறுத்தனர்.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஒய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்டக்குழு நடத்திய ஆய்வில் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் செய்து கொடுத்தது உறுதியானது.

இந்நிலையில், கர்நாடக சிறைத்துறையின் முன்னாள் டிஐஜி ரூபா இதுகுறித்து கூறுகையில், சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் செய்து கொடுத்தது உண்மைதான் என்று உயர்மட்ட குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நான் முறைப்படி விசாரணை நடத்தி கண்டுபிடித்த தகவல்கள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. நான் கூறாத சில தகவல்களும் அந்த அறிக்கையில் உள்ளது.

 

குறிப்பாக தனியாக சமையல் செய்தது, அதற்கு ஆதாரமாக சிதறி இருந்த மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்களை சேகரித்தது. சசிகலா தங்கி இருந்த 4 அறைகளிலும் அவர் பார்வையாளர்களை சந்தித்த அறையிலும் திரைச் சீலைகள் போடப்பட்டு இருந்தது உள்ளிட்டவற்றை குறிப்பிடலாம். சசிகலா சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துதான் இதையெல்லாம் சாதித்தார்.ஆனால் அந்த புகாரை கர்நாடக லஞ்ச ஒழிப்பு துறை தான் விசாரணை நடத்த வேண்டும் என்று வினய்குமார் பரிந்துரைத்து உள்ளார்.

லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி சிறை துறை டி.ஜி.பி. சத்யநாராயணராவ், சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் மற்றும் சிறை துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும்.

அதிகாரிகள் சிறை விதிமுறைகளுக்கு மீறி சலுகை செய்து கொடுத்து உள்ளதால் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இந்த புகாருக்காக சசிகலாவின் தண்டனையை நீடிக்க முடியாது. நன்னடத்தை விதிகளை காரணம் காட்டி அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்றார்.