கோஹினூர் வைரம் இங்கிலாந்து ராணியிடம் வேறு வழியின்றி ஒப்படைக்கப்பட்டது: தொல்லியல் துறை

 

கோஹினூர் வைரம் இங்கிலாந்து ராணியிடம் வேறு வழியின்றி ஒப்படைக்கப்பட்டது: தொல்லியல் துறை

கோஹினூர் வைரம் இங்கிலாந்து ராணியிடம் வேறு வழியின்றி ஒப்படைக்கப்பட்டதாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது

டெல்லி: கோஹினூர் வைரம் இங்கிலாந்து ராணியிடம் வேறு வழியின்றி ஒப்படைக்கப்பட்டதாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் 14-ஆம் நூற்றாண்டில் தோண்டி எடுக்கப்பட்டதாக கூறப்படும் கோஹினூர் வைரம் 108 காரட் கொண்டது. அந்த வைரம் தான் தற்போது வரை உலகின் பெரிய வைரமாக உள்ளது. அதன் மதிப்பு ரூ.1,480 கோடி ஆகும். பல்வேறு நபர்களிடம் கைமாறிய அந்த வைரம் 1850-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இங்கிலாந்தில் உள்ள ஒரு அருங்காட்சியத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள அந்த வைரத்திற்கு நான்கு நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த வைரத்தை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக ஒரு தரப்பினர் கூறி வந்தாலும், அது பிரிட்டன் மன்னர் பரம்பரைக்கு இந்திய மன்னர்களால் பரிசாக வழங்கப்பட்டது என மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர். அதனை மீட்டு மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, கோஹினூர் வைரத்தை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொள்ளையடித்துச் செல்லவில்லை. அது பரிசாகவே வழங்கப்பட்டது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரோகித் சபர்வால் என்பவர் அந்த வைரம் இங்கிலாந்திடம் சென்றது எப்படி? என கேட்டு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அதற்கு இந்திய தொல்லியல் துறை பதில் அளித்துள்ளது.அதில், டெல்லியில் உள்ள தேசிய ஆவண காப்பகத்தில் உள்ள ஆவணங்களின்படி, டல்ஹவுசி பிரபுவுக்கும், லாகூர் மகாராஜா துலீப் சிங்குக்கும் இடையே 1849-ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி வேறு வழியின்று அந்த வைரம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, மஹாராஜா துலீப் சிங்குக்கு 9 வயது என கூறப்பட்டுள்ளது.

கோஹினூர் வைரம் பரிசாக அளிக்கப்பட்டது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், அதற்கு முரணாக தொல்லியல் துறை இந்த தகவலை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.