கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 2 பேர் விலகல்; பாஜக-வுக்கு தாவல்?

 

கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 2 பேர் விலகல்; பாஜக-வுக்கு தாவல்?

கோவாவில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏ-க்கள் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்

கோவா: கோவாவில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏ-க்கள் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

கோவா மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெருமான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்றாலும், ஆட்சி அமைக்கும் அளவிற்கான இடத்தில் வெற்றி பெறவில்லை. அதேசமயம், இரண்டாவது இடம் பிடித்த பாஜக, சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. கோவா முதல்வராக அக்கட்சியின் மனோகர் பாரிக்கர் உள்ளார்.

முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என பாஜகவுக்கு கூட்டணிக் கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. எனவே, கூட்டணிக் கட்சிகளை வளைக்கும் முயற்சிகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. அதேபோல், கூட்டணிக் கட்சிகளை தக்க வைக்கும் முயற்சிகளையும், எதிரணியை சேர்ந்த எம்எல்ஏ-க்களை இழுக்கும் வேலையிலும் பாஜக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், திடீர் திருப்பமாக  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தயானந்த் சோப்தே, சுபாஷ் ஷிரோத்கர் ஆகிய இரண்டு எம்எல்ஏ-க்கள் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். முன்னதாக, டெல்லியில் பாஜக தலைவர் அமித்ஷாவை அவர்கள் இன்று சந்தித்து பேசினர். அதன்பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். கூடிய விரைவில் அவர்கள் இருவரும் பாஜக-வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.