கோவாவில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்! ரொம்ப எதிர்பார்க்காதீங்க ஏமாந்து போகாதீங்க

 

கோவாவில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்! ரொம்ப எதிர்பார்க்காதீங்க ஏமாந்து போகாதீங்க

கோவாவில் இன்று நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், வாகனம் மற்றும் பிஸ்கட் மீதான வரியை குறைக்க வாய்ப்பில்லை. இருப்பினும் ஆடம்பர ஹோட்டல், அவுட்டோர் கேட்டரிங் சர்வீஸ் போன்றவற்றுக்கான வரியை குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக வாகனங்கள் விற்பனை கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என இத்துறை நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதுதவிர பிஸ்கட் நிறுவனங்களும் வரியை குறைக்க வேண்டும் போர்க்கொடி தூக்கியது. மேலும் தொலைத்தொடர்புக்கான ஜி.எஸ்.டி.யை 18லிருந்து 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் கோரிக்கை வைத்தது.

ஜி.எஸ்.டி.

ஆனால், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பிட்மெண்ட் குழு, வாகனம் மற்றும் பிஸ்கட் துறைகளின் வரி குறைப்பு கோரிக்கையை நிராகரித்து விட்டது. இவற்றின் மீதான வரியை குறைத்தால் பெரிய அளவில் வருவாய் பற்றாக்குறை ஏற்படும் என்பதே காரணம். மேலும் தொலைத்தொடர்பு துறையின் பரிந்துரையையும் ஏற்க மறுத்து விட்டது.

அதேசமயம்,  ரூ.7,500 முதல் அதற்கு அதிகமான  (ஒரு நாள் இரவு தங்குவதற்கு) ஹோட்டல் கட்டணங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு பிட்மெண்ட் குழு பரிந்துரை செய்துள்ளது. பிட்மெண்ட் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்தான் ஜி.எஸ்.டி. கவுன்சில் இறுதி முடிவு எடுக்கும்.

நிர்மலா சீதாராமன்

இதனால் இன்று கோவாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வாகனம் மற்றும் பிஸ்கட் மீதான வரியை குறைக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. அதேசமயம் ஆடம்பர ஹோட்டல், அவுட்டோர் கேட்டரிங் சர்வீஸ் போன்ற சில பிரிவுகளில் வரி குறைப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.