கோர்ட் உத்தரவு இருக்கு! என்னை யாரும் ஒன்னும் செய்ய முடியாது… முன்னாள் முதல்வர் மகள்

 

கோர்ட் உத்தரவு இருக்கு! என்னை யாரும் ஒன்னும் செய்ய முடியாது… முன்னாள் முதல்வர் மகள்

என் அம்மாவை சந்திக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால், அவரை பார்க்க காஷ்மீர் செல்லும் போது யாரும் என்னை துன்புறுத்த முடியாது என காவலில் இருக்கும் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் சனா இடில்ஜியா தெரிவித்தார்.

மத்திய அரசு கடந்த மாதம் 5ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. அதற்கு முந்தைய நாள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, ஒமர் அப்துல்லா உள்பட 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இன்று வரை அவர்களது வீட்டு காவல் தொடருகிறது.

மெகபூபா முப்தி

மெகபூபா முப்தியின் மகள் சனா இடில்ஜியா சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டதால் அவரும் சில நாட்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பின் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே சனா இடில்ஜியா தனது அம்மா மெகபூபா முப்தியை சந்திக்க வேண்டி காஷ்மீர் நிர்வாகத்திடம் பல முறை வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதற்கு நிர்வாகம் மறுத்து விட்டது.

இதனையடுத்து, கடந்த ஒரு மாதமாக தனது தாயின் (மெகபூபா முப்தி) உடல் நலம் குறித்து கவலையாக இருக்கிறது. அவரை நான் சந்திக்க  அனுமதிக்க அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சனா இடில்ஜியா மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், மெகபூபா முப்தியை சந்திக்க அனுமதி வழங்கியது. அதேசமயம் ஸ்ரீநகரில் சுதந்திரமாக செல்வதை பொறுத்தவரை, அது நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

உச்ச நீதிமன்றம்

சனா இடில்ஜியா இது குறித்து கூறுகையில், இந்திய அரசு எனக்கு அடிப்படை உரிமை மற்றும் எனது சிவில் சுதந்திரங்களை தரவில்லை. இதனால் வேறுவழியில்லாமல் உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்டினேன். அதன் மீது அதிகளவில் நம்பிக்கை உள்ளது. இந்த தீர்ப்புக்கு பிறகு நீதித்துறையின் மீதான நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முறை நான் காஷ்மீர் செல்லும்போது, அதிகாரிகள் என்னை துன்புறுத்தவோ அல்லது அச்சுறுத்தவோ விடமாட்டேன் என்று கூறினார்.