கோரிக்கைகளை ஏற்பதாக முதல்வர் ஆதித்யநாத் உறுதி: சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிர்வாகியின் மனைவி

 

கோரிக்கைகளை ஏற்பதாக முதல்வர் ஆதித்யநாத் உறுதி: சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிர்வாகியின் மனைவி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன நிர்வாகியின் மனைவியை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன நிர்வாகியின் மனைவியை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வந்தவர் விவேக் திவாரி. இவர், சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் iPhone X மொபைல் அறிமுக விழாவில் கலந்து கொண்ட பின், தன்னுடைய காரில் வந்து கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில், மீரட் காவல் நிலையத்தைச் சேர்ந்த பிரஷாந்த் சௌத்ரி, சந்தீப் என்ற 2 போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த விவேக் திவாரியையும் தடுத்து நிறுத்தியதாகவும், அதற்கு அவர் காரை நிறுத்தாமல் சென்றதாகவும் கூறப்படுகிறது. அதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த விவேக் திவாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து, போலீசார் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் ஆளும் பாஜக அரசு மீதும், முதல்வர் யோகி ஆதித்யநாத் மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தனர்.

இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன நிர்வாகியின் மனைவி கல்பனா திவாரி மற்றும் குழந்தைகளை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கல்பனா திவாரி, என்னுடைய கொரிககிகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டு உதவி செய்வதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

மாநில அரசு மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என ஏற்கனவே கூறியிருந்தேன். அந்த நம்பிக்கை இன்று வலுப்பெற்றுள்ளது. எனது கணவரை சுட்டுக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பனி, குழந்தைகளின் கல்வி செலவு, எனது கணவரின் தாயாருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்தேன். எனது கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு உதவி புரிவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்.