கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர்.. 400 கோடிக்கு சாலை.. முதலமைச்சரின் அடுக்கடுக்கான திட்டங்கள்!

 

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர்.. 400 கோடிக்கு சாலை.. முதலமைச்சரின் அடுக்கடுக்கான திட்டங்கள்!

நந்தனம் மைதானத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அடுக்கடுக்கான திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை: நந்தனம் மைதானத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அடுக்கடுக்கான திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மறைந்த தமிழக முதலமைச்சரும் அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் விழா நடைபெற்றது.

அக்கூட்டதில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், “ஆங்கிலேயருக்கு பிறகு அதிக முறை ஜார்ஜ் கோட்டையை ஆண்ட கட்சி அதிமுகதான். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஆடம்பர விழா அல்ல; மக்களுக்கு பயனளிக்கும் விழா. குடிசைகள் இல்லாத சென்னையை உருவாக்கி வருகிறோம். அதற்காக சீர்மிகு சென்னை திட்டத்தின் கீழ் ரூ.953 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். தமிழக மக்களுக்காக கிருஷ்ணா குடிநீர் திட்டத்தினை செயல்படுத்தியவர். 

சென்னை அருகே உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையம் இனி டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெயரில் அழைக்கப்படும். எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள சுமார் 20.8 கி.மீ நீளமுள்ள மவுண்ட் – பூந்தமல்லி – ஆவடி நெடுஞ்சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும்.

சென்னை செண்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்ட அரசு பரிந்துரை செய்துள்ளது. சென்னையின் சாலைகளை சீரமைக்க 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். பள்ளிக்கரணையில் ரூ.31 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டமைக்கப்படும். எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து அரசை விமர்சித்து வருகிறார். இந்த அரசை இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் வீழ்த்த முடியாது” என பேசியுள்ளார்.