கொல்கத்தா மாநாட்டில் பெங்காலியில் பேசிய ஸ்டாலின்: ஹெச்.ராஜா கிண்டல்

 

கொல்கத்தா மாநாட்டில் பெங்காலியில் பேசிய ஸ்டாலின்: ஹெச்.ராஜா கிண்டல்

கொல்கத்தா மாநாட்டில் பெங்காலி மொழியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலினை பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா மறைமுகமாக கிண்டலடித்துள்ளார்

சென்னை: கொல்கத்தா மாநாட்டில் பெங்காலி மொழியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலினை பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா மறைமுகமாக கிண்டலடித்துள்ளார்.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. பாஜகவுக்கு எதிரான கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெறும் மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின், வங்க மொழியில் தனது உரையை தொடங்கி பேசினார். பின்னர் தமிழில் பேசிய ஸ்டாலின், மேற்கு வங்கத்திற்கும், தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக தெரிவித்தார்.

பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பதே நமது அனைவரின் சிந்தனை. மே மாதம் வரவிருக்கும் பொதுத் தேர்தல்  நாட்டின் இரண்டாம் சுதந்திரப் போராட்டமாக இருக்கும் இரண்டாவது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்க மம்தா பானர்ஜியின் அழைப்பின் பேரில் இங்கு வந்துள்ளேன். மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை மீட்பதுதான் இந்தியாவின் இரண்டாவது சுதந்திர போராட்டம் என்றும் ஸ்டாலின் பேசினார். ஸ்டாலின் தமிழில் பேசியதை பெங்காலி மொழியில் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் மொழி பெயர்த்தார்.

இந்நிலையில், கொல்கத்தா மாநாட்டில் பெங்காலி மொழியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலினை பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா மறைமுகமாக கிண்டலடித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,”ஒரு மாணவனிடம் சுக்கு, மிளகு,  திப்பிலி என்று எழுதிக் கொடுத்ததை அவன் சுக்குமி, லகுதி, ப்பிலி என்று படித்தானாம். இந்த பதிவிற்கும் கொல்கத்தாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை” என பதிவிட்டுள்ளார்.