கொரோனா வைரஸ் படுத்தும் பாடு…… எங்க ஊரு பெயரை மாத்துங்க சார்……. ஒரு கிராமமே கோரிக்கை

 

கொரோனா வைரஸ் படுத்தும் பாடு…… எங்க ஊரு பெயரை மாத்துங்க சார்……. ஒரு கிராமமே கோரிக்கை

உத்தர பிரதேசத்தில் ஒரு கிராமத்தின் பெயரும், கொரோனா வைரஸ் பெயரும் ஒன்றுபோல் உள்ளதால் வெளியாட்கள் அந்த கிராமத்தினரை கிண்டல் செய்கின்றனர். அதனால் தங்களது ஊர் பெயரை மாற்றும்படி அரசுக்கு கோரிக்கை விடுக்க கிராமவாசிகள் அனைவரும் முடிவு செய்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவிலிருந்து 90 கி.மீட்டர் தொலைவில் உள்ளது கோரவுனா என்ற குக்கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 9 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகின்றனர். கோரவுனா கிராமத்தில் தொடக்க பள்ளி உள்பட பல வசதிகள் உள்ளன. கிராமவாசிகள் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் ரூபத்தில் அவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது.

கோரவுனா கிராமம்

அந்த கிராமத்தில் யாருக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கபடவில்லை. அப்புறம் எப்படி அந்த மனஉளைச்சல் ஏற்படும் என்றுதான் கேட்கிறீர்கள். அந்த கிராமத்தின் பெயரான கொரவுனாவும், தொற்று நோயான கொரோனா வைரஸ் பெயரும் உச்சரிக்கும் போது ஒரே மாதிரியாக இருப்பதால் வெளியாட்கள் அந்த கிராமத்தினரை கிண்டல் செய்கின்றனர். இதுதான் அந்த கிராமத்தினருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ்

இது தொடர்பாக அந்த கிராமத்தில் வசிக்கும் ராஜூ திரிபாதி கூறுகையில், உச்சரிக்கும்போது பெயர் ஒரே மாதிரியாக இருப்பதை வைத்து எங்களது உறவினர்கள் கூட கிண்டல் செய்கின்றனர். நாங்கள் கோரவுனாவுக்கு வரமாட்டோம் என்று எங்களிடம் சொல்கிறார்கள். ஒரு நபர் தவறுதலாக என்னுடைய மொபைல எண்ணுக்கு அழைத்தார். அப்போது நான் கோரவுனாவில் இருந்து பேசுகிறேன் என தெரிவித்தேன். உடனே அவர் நீங்கள் எப்படி உயிருடன் இருக்கிறீர்கள் என்று கேட்டார் என தெரிவித்தார்.

கோரவுனா கிராமவாசிகள்
 
கோரவுனா கிராமத்தில் வசிக்கும் வரும் விவசாயி கோகுல் கூறுகையில், பல பத்தாண்டுகளாக இந்த பெயர் உள்ளது. ஆனால் நாங்கள் தற்போது விரும்பதாகதவர்கள் போல் நடத்தப்படுகிறோம். கோரவுனா என்பதற்கு எந்தவித அர்த்தமும் இல்லை. ஆனால் கொரோனா (வைரஸ்) நினைவு நீண்ட நாட்களுக்கு இருக்கும். அதனால் வரும் ஆண்டுகளில் கிண்டல் மற்றும் ஏளனங்களை எதிர்க்கொள்வதை காட்டிலும் கிராமத்தின் பெயரை மாற்றுவது நல்லது. அதனால் முடக்கம் முடிவடைந்தபிறகு எங்களது கிராமத்தின் பெயரின் மாற்றும்படி அரசுக்கு கிராமத்தினர் அனைவரும் கோரிக்கை விடுக்க உள்ளோம் என தெரிவித்தார்.