கொரோனா வைரஸ் நெருக்கடி…. தெலங்கானாவை பின்பற்றிய மகாராஷ்டிரா….. முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சம்பளத்தில் 60 சதவீதம் கட்…..

 

கொரோனா வைரஸ் நெருக்கடி…. தெலங்கானாவை பின்பற்றிய மகாராஷ்டிரா….. முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சம்பளத்தில் 60 சதவீதம் கட்…..

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக மகாராஷ்டிராவில் முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சம்பளத்தில் 60 சதவீதம் குறைக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளதாக துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. நம் நாட்டில் தீவிரவமாக பரவி வரும் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிராதான். மேலும் லாக்டவுன் மகாராஷ்டிராவின் கஜானாவை பாதித்துள்ளது. இதனை சரிசெய்ய தெலங்கானா அரசு மேற்கொண்ட சம்பள குறைப்பு நடவடிக்கையை மகாராஷ்டிரா அரசு கையில் எடுத்துள்ளது.

முதல்வர் உத்தவ் தாக்கரே

இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், மகாராஷ்டிராவின் துணை முதல்வருமான அஜித் பவார் கூறியதாவது: முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 60 சதவீதத்தை குறைப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், மாநில அரசு பணியாளர்கள் மார்ச் மாத சம்பளத்தில் 50 முதல் 75 சதவீதம் வரை மட்டுமே பெறுவர்.

துணை முதல்வர் அஜித் பவார்

ஏ மற்றும் பி பிரிவு அரசு பணியாளர்களுக்கு மார்ச் மாத சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. சி பிரிவு அரசு ஊழியர்கள் மார்ச் மாத சம்பளத்தில் 75 சதவீத்தை பெறுவர். அதேசமயம் டி பிரிவு அரசு பணியாளர்களின் சம்பளத்தில் எந்தவித குறைப்பும் மேற்கொள்ளவில்லை. மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அமைப்புகளின் பிரநிதிகளுடன் கலந்து ஆலோசனை செய்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடி மற்றும் லாக்டவுன் போன்றவற்றால் மாநில பொருளாதார வருவாய் குறைந்ததை கணக்கில்கொண்டு சம்பள குறைப்பு முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.