கொரோனா வைரஸால் மந்தநிலைக்குள் நுழையும் உலக பொருளாதாரம்…. தரநிர்ணய நிறுவனம் எச்சரிக்கை

 

கொரோனா வைரஸால் மந்தநிலைக்குள் நுழையும் உலக பொருளாதாரம்….  தரநிர்ணய நிறுவனம் எச்சரிக்கை

கொரோனா வைரஸால் உலக பொருளாதாரம் மந்தநிலைக்குள் நுழைகிறது என சர்வதேச தரநிர்ணய நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.

கொரோனா வைரஸால் உலக நாடுகள் படாதபாடு பட்டு வருகிறது. மேலும் பொருளாதார ரீதியாகவும் பெரிய அடியை நாடுகள் சந்தித்து வருகின்றன. கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்றால் பெரிய அளவில் உயிர் இழப்புகளும், பொருளாதாரத்தில் பெரிய வீழ்ச்சியும் ஏற்படும் பல்வேறு நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

எஸ்.பி. குளோபல் ரேட்டிங்ஸ்

சர்வதேச தரநிர்ணய நிறுவனமான எஸ்&பி நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பொருளாதார நிபுணர் ஷான் ரோச் கூறியதாவது: இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சீனாவில் ஏற்பட்ட அதிர்ச்சி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் பணிநிறுத்தம் மற்றும் வைரஸ் பரவுதல் போன்றவற்றால் ஆசியா-பசிபிக் முழுவதும் ஆழ்ந்த மந்தநிலைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

பொருளாதார நெருக்கடி

உலகளாவிய பொருளாதாரம் மந்தநிலைக்குள் நுழைகிறது என்பதால் இந்த ஆண்டில் (2020) ஆசிய-பசிபிக் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும். எங்களது தற்போதைய கணிப்பின்படி, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின்  பொருளாதார வளர்ச்சியை முறையே 2.9 சதவீதம் (முதலில் 4.8 சதவீதம்), 5.2 சதவீதம் (5.7 சதவீதம்) மற்றும் மைனஸ் 1.2 சதவீதமாக (மைனஸ் 0.4 சதவீதம்) குறைத்துள்ளோம். கொரோனா வைரஸ் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.