கொரோனா வைரசுக்கு எதிராக போராட இந்தியாவுக்கு ரூ.11,250 கோடி கடன்.. சரியான நேரத்தில் கை கொடுக்கும் ஆசிய மேம்பாட்டு வங்கி

 

கொரோனா வைரசுக்கு எதிராக போராட இந்தியாவுக்கு ரூ.11,250 கோடி கடன்.. சரியான நேரத்தில் கை கொடுக்கும் ஆசிய மேம்பாட்டு வங்கி

கொரோனா வைரசுக்கு எதிராக போராட இந்தியாவுக்கு சுமார் ரூ.11,250 கோடி கடன் வழங்க ஆசிய மேம்பாட்டு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் தொற்று நோயான கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு 40 நாள் லாக்டவுனை நடைமுறைப்படுத்தியுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும் போது மாஸ்க் அணிதல் மற்றும் சமூக விலகலை கடைப்பிடித்தல் போன்ற முன்எச்சரிகை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கும்படி மக்களை அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் மற்றும் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தயார் நிலையில் மருத்துவ பணியாளர்கள்

அதேசமயம் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நிதி மற்றும் மருத்துவ வளங்கள் குறைந்து கொண்டே இருக்கிறது. மாநிலங்கள் கேட்கும் நிதியை மத்திய அரசால் வழங்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக போராட இந்தியாவுக்கு சுமார் ரூ.11,250 கோடி கடன் வழங்க ஆசிய மேம்பாட்டு வங்கி நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளுக்கான மருத்துவ உபகரணங்களை முன்னுரிமை அடிப்படையில் கிடைக்க செய்வதற்கு அவசர தேவை இருக்கும் தற்போதைய நிலையில் ஆசிய மேம்பாட்டு வங்கி வழங்கும் கடன் பெரிய உதவியாக இருக்கும்.

 மசாட்சுகு அசகாவா

இந்தியாவுக்கு கடன் வழங்க ஒப்புதல் அளித்தது தொடர்பாக ஆசிய மேம்பாட்டு வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகாவா கூறுகையில், நோய்களை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பு, அத்துடன் சமூகத்தின் ஏழை மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு சமூக பாதுகாப்பு உள்ளிட்ட உடனடி முன்னுரிமைகளுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் இந்த கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னோடியில்லாத சவாலுக்கு பதிலளிக்கும் இந்திய அரசாங்கத்தை ஆதரிப்பத்தில் அது (ஆசிய மேம்பாட்டு வங்கி) முழுமையாக உறுதி பூண்டுள்ளது என தெரிவித்தார்.