கொரோனா முதல் நிலை என்கிறார் முதல்வர்… இரண்டாம் நிலை என்கிறார் செயலாளர்… யார்தான் உண்மையைச் சொல்கின்றீர்கள்?

 

கொரோனா முதல் நிலை என்கிறார் முதல்வர்… இரண்டாம் நிலை என்கிறார் செயலாளர்… யார்தான் உண்மையைச் சொல்கின்றீர்கள்?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மூன்றாம் கட்டத்தை அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி வரும் நிலையில், முதல்வர், சுகாதாரத் துறை செயலாளர் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் ட்வீட் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முதல் கட்டத்தில்தான் உள்ளது. இரண்டாம் கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது” என்றார். 28ம் தேதி காலையில் பேட்டி அளித்த சுகாதாரத் துறை செயலாளர் தமிழகம் இரண்டாம் நிலையில் உள்ளது என்று கூறினார்.

மதுரையில் உயிரிழந்த நபர் வெளிநாட்டுக்கு செல்லாதவர், இதைப்போல வௌிநாட்டுக்கு செல்லாத, வெளிநாட்டுக்கு சென்றவர்களுடன் தொடர்பில் இல்லாதவர்களுக்கு கூட கொரோனா தொற்று ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் கொரோனா மூன்றாவது கட்டத்தை அடைந்திருக்கலாம். எனவே, உலக சுகாதார நிறுவனம் கூறியபடி சந்தேகத்துக்கு உரியவர்களுக்கு எல்லாம் பரிசோதனை செய்து கொரோனா பாதிப்பைக் கண்டறிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி ட்வீட்!

ஆனால் தமிழக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் மக்களை பீதிக்குள்ளாகும் வகையிலேயே உள்ளன. மருத்துவமனை, வென்டிலேட்டர் தயார் நிலை என்று அவர்கள் செய்வது எல்லாம் நான்காம் கட்டத்துக்கான ஏற்பாடாகவே உள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பத்திரிகையாளர், வெளிநாட்டுக்கு சென்று வந்த தன்னுடைய நண்பர் ஒருவரை 20 நாட்கள் கழித்து தமிழக அரசு அதிகாரிகள் கண்டறிந்து வீட்டுக்கு வந்தனர். அவரை அடுத்த 15 நாட்களுக்கு தனிமையாக இருக்கும்படி உத்தரவிட்டு சென்றுள்ளனர். கொரொனா அறிகுறி 14 நாட்களுக்குள் தென்படும். இவருக்கு அதையும் தாண்டி ஆறு நாட்கள் ஆகிறது. வந்த அதிகாரிகள் ஒன்று பரிசோதனை செய்திருக்க வேண்டும், ஆனால் எச்சரிக்கை மட்டும் விடுத்து சென்றுள்ளனர். இப்படி எத்தனை பேருக்கு வெறும் எச்சரிக்கை மட்டும் கொடுக்கப்பட்டதோ தெரியவில்லை” என்றார்.

இவை எல்லாம் தமிழகத்தின் நிலையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகின்றன. தற்போது ஊரடங்கு உள்ள நிலையில் மக்கள் மத்தியில் கொரோனா அச்சம் மிகமிகக் குறைவாகவே உள்ளது. அரசு ஒன்றுமில்லை என்று கூற கூற மக்கள் வெளியேறிப் பொழுதுபோக்குவது தொடர்கதையாகிறது. அரசு உண்மையைச் சொல்லி, மக்களை தயார்ப்படுத்த வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது!