கொரோனா பாதித்த மகனின் வெளிநாட்டுப் பயணத்தை மறைத்த டி.எஸ்.பி! – தெலங்கானாவில் பகீர்

 

கொரோனா பாதித்த மகனின் வெளிநாட்டுப் பயணத்தை மறைத்த டி.எஸ்.பி! – தெலங்கானாவில் பகீர்

தெலங்கானாவில் கொரோனா பாதிப்பு உள்ள தன்னுடைய மகனின் வெளிநாட்டுப் பயண தகவலை டி.எஸ்.பி ஒருவர் மறைத்த செயல் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்: தெலங்கானாவில் கொரோனா பாதிப்பு உள்ள தன்னுடைய மகனின் வெளிநாட்டுப் பயண தகவலை டி.எஸ்.பி ஒருவர் மறைத்த செயல் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று நோய் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதை விடுத்து பீதி ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மட்டுமே மிகப்பெரிய அளவில் நடக்கின்றன. கொரோனா பாதிப்பு பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தாததன் விளைவு இன்று கூட்டம் கூட்டமாக மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. தனிமைப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றால், இங்கு மிகப்பெரிய ஒன்றுகூடல் நடந்துள்ளது.

படித்தவர்கள், உயர் பதவியில் மத்தியில் இந்த பீதி மிகப்பெரியதாக இருக்கும்போது பொது மக்களைக் குறைசொல்லி ஒரு பயனும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.

ttn

வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள் மூலமாக கொரோனா பரவி வரும் நிலையில், வெளிநாட்டுக்கு சென்றவர்கள் பட்டியலை எடுக்கும்படியும், அவர்களை கண்காணிக்கும்படியும் போலீசாருக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தெலங்கானாவின் பத்தராத்தி மாவட்டிடத்தில் போலீஸ் டி.எஸ்.பி-யாக இருப்பவர் எஸ்.எம்.அலி. இவரது மகன் சில தினங்களுக்கு முன்பு லண்டனிலிருந்து திரும்பியுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் தங்கள் சுய விவரங்களை போலீசில் தெரிவிக்க வேண்டும், வீடுகளில் சுய தனித்திருத்தலை மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை மீறி டி.எஸ்.பி அலியின் மகன் பயண விவரங்களை மறைத்துள்ளார். மேலும், பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது அவருக்கு. கொரோனா அறிகுறிகள் இருக்கவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

அதன் பிறகு விசாரித்தபோது டி.எஸ்.பி-யின் மகன் வெளிநாட்டுக்கு சென்று வந்த விவரம் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மகன் பற்றிய விவரத்தை மறைத்த டி.எஸ்.பி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. டி.எஸ்.பி-யின் குடும்பத்தினர், வீட்டில் வேலை செய்பவர்கள் என அனைவரையும் 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.