கொரோனா கூடுதல் கவனம் தேவை! – அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

 

கொரோனா கூடுதல் கவனம் தேவை! – அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 4 அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. தமிழக அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் நேற்று மட்டும் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு, பொது மக்கள் கவனத்துடன் கூடுதல் விழிப்புடன் இருந்து கொரோனாவை தவிர்க்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழ்நாட்டில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்திருப்பதும், இந்த எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 4 அதிகரித்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. கொரோனாவின் கொடிய தன்மை இதுதான். அனைவரும் கூடுதல் விழிப்புடன் இருப்போம்!” என்று கூறியுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், “நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆள் பற்றாக்குறை காரணமாக இயங்காததால் நெல்லை விற்க முடியாமல் உழவர்கள் அவதிப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி  உழவர்களின் இந்த சிக்கலைத் தீர்க்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.