கொரோனா உச்சத்தில் உள்ள நேரத்திலும் ஈஷாவுக்காக சட்டத்தை திருத்திய எடப்பாடி! – வேல்முருகன் கண்டனம்

 

கொரோனா உச்சத்தில் உள்ள நேரத்திலும் ஈஷாவுக்காக சட்டத்தை திருத்திய எடப்பாடி! – வேல்முருகன் கண்டனம்

கொரோனா தடுப்பு நடவடிக்கை உச்சத்தில் உள்ள நேரத்தில், அனைவரின் கவனமும் கொரோனா மீது இருக்கும் நிலையில் ஜக்கி வாசுதேவின் ஈஷாவுக்காக சுற்றுச்சூழல் சட்டத்தில் எடப்பாடி பழனிசாமி திருத்தம் செய்துள்ளதாக பண்ருட்டி வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை உச்சத்தில் உள்ள நேரத்தில், அனைவரின் கவனமும் கொரோனா மீது இருக்கும் நிலையில் ஜக்கி வாசுதேவின் ஈஷாவுக்காக சுற்றுச்சூழல் சட்டத்தில் எடப்பாடி பழனிசாமி திருத்தம் செய்துள்ளதாக பண்ருட்டி வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா அச்சம் நம் அடிவயிற்றையே கலக்கிக் கொண்டிருக்கிறது. நம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்கிறார். இப்படிச் சொல்லிக்கொண்டே அவர், கொரோனாவை விடவும் நிரந்தர ஆபத்தை விளைவிக்கும் காரியம் ஒன்றையும் செய்து முடித்திருக்கிறார். மூன்று நாட்களுக்கு முன்னர்தான் (30.3.2020) அந்தக் காரியத்தைச் செய்து முடித்தார். அதாவது, மலைப்பகுதிகளில் நிலம் வாங்கவும் விற்கவும் கட்டிடங்கள் எழுப்பவும் அனுமதிக்கும் வகையில் மலைப்பகுதி பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தியிருக்கிறார்.

isha-yoga

முதல்வர் பழனிசாமி இப்படி சட்டத் திருத்தம் செய்திருக்கிறார் என்றால் அது ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்திற்காகத்தான். தமிழ்நாட்டிலுள்ள மலைப்பகுதிகளைப் பாதுகாப்பதற்காக மலைப்பகுதி பாதுகாப்பு அமைப்பு, கடந்த 1990ஆம் ஆண்டு, நகர் மற்றும் தேச திட்டமிடுதல் சட்டத்தின்  கீழ் நிறுவப்பட்டது. இந்த அமைப்பு காடுகள் சுருங்கி வருவதைத் தடுப்பதற்காகவும், காடு சார்ந்த வளங்களைப் பாதுகாப்பதற்காகவும் உருவாக்கப்பட்டது.
உயிரியல் பன்மை வளமிக்க மலைப்பகுதியாக மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ள சூழலில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் உள்ள காடு மற்றும் காட்டுக்கு அருகாமை இடங்கள் இந்த மலைப்பகுதி பாதுகாப்பு அமைப்பின் பொறுப்பில் விடப்பட்டன. அங்குள்ள நிலத்தை ஏதாவது பயன்பாட்டுக்கு மாற்றியமைக்க வேண்டும் என்றால் இந்த அமைப்பின் அனுமதியைப் பெற்றால் மட்டுமே, உள்ளாட்சி அமைப்புகள் அதற்கு ஒப்புதல் அளிக்க முடியும். இப்படி விதிமுறை இருக்கும் நிலையில், கடந்த 2016 அக்டோபர் 20ந் தேதிக்கு முன்பாக மலைப்பகுதிகளில் நிலம் வாங்கியவர்கள், வீட்டுமனை வியாபாரம் செய்யவும், கட்டிடங்கள் எழுப்பவும் எந்த அனுமதியும் தேவையில்லை என்கிற வகையில் புதிய சட்டவிதிமுறைகளை வகுத்து அதற்கான அரசாணையைத்தான் மூன்று நாட்களுக்கு முன்னர் (30.3.2020) பிறப்பித்திருக்கிறது பழனிசாமி அரசு. இந்தச் சட்டத் திருத்தத்தின்படி, ஏற்கனவே அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கும் அனுமதியளிக்க முடியும்.

edapaadi-palanisamy

மலைப்பகுதி பாதுகாப்பு அமைப்பிடமோ, உள்ளாட்சி அமைப்புகளிடமோ கலந்தாலோசிக்காமலேயே இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மலைப்பகுதிகளில் நிலம் வாங்கிய ஏழை மற்றும் அப்பாவி மக்களின் துயர் துடைப்பதற்காகவே இந்தப் புதிய விதிமுறை வகுக்கப்படுவதாக அரசாணையின் முன்னுரையில் கூறப்பட்டுள்ளது. யானை வழித்தடம் மற்றும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் யானை வழித்தடம் மற்றும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில்தான் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. அது யானை வழித்தடம் மற்றும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடம்தான் என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். ஆனால் ஜக்கி வாசுதேவ் மோடிக்கு நெருக்கமானவர் என்பதால் அதை யானை வழித்தடம் என்றோ, சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்றோ இதுவரை அறிவிக்காதிருக்கிறது தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சகம்.

isha-yoga-center

சர்ச்சையையும் ஜக்கி வாசுதேவ் மற்றும் அவரது ஈஷா யோகா மையத்தையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. ஏற்கனவே ஈஷா யோகா மையத்திற்கு எதிரான பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவற்றில் நிலுவையில் உள்ளன. அப்படியிருந்தும், சட்டத்தைத் திருத்தி, புதிய விதிமுறைகளை வகுத்து, காவிச் சாமியார் என்கிற போர்வையில் இருந்துகொண்டு, சுற்றுச்சூழல் முக்கியத்துவமுடைய தமிழக மலைப்பகுதியை கபளீகரம் செய்திருக்கும் ஈஷா மைய ஜக்கி வாசுதேவ் மேலும் பலனடைய வைத்திருக்கிறது பழனிசாமி அரசு.
இதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், உடனடியாக அந்தச் சட்டத் திருத்தத்தையும் புதிதாகப் புகுத்திய விதிமுறைகளையும் திரும்பப்பெறக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
இல்லையேல், இந்த செயலுக்கு எதிராக, தமிழக மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவும் தயங்கமாட்டோம்” என்று கூறியுள்ளார்.