கொரோனாவைரஸால் சீன பொருட்கள் இறக்குமதி பாதிப்பு…. 1,050 பொருட்களை எந்தநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யலாம்…. தேடுதல் வேட்டையை தொடங்கிய மத்திய அரசு…

 

கொரோனாவைரஸால் சீன பொருட்கள் இறக்குமதி பாதிப்பு…. 1,050 பொருட்களை எந்தநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யலாம்…. தேடுதல் வேட்டையை தொடங்கிய மத்திய அரசு…

கொரோனாவைரஸால் சீனாவிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்வது பாதித்துள்ளது. இதனால் அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்து வந்த சுமார் 1,050 பொருட்களை வேறு எந்தநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யலாம் என மத்திய அரசு தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.

சீனாவிலிருந்து நம் நாடு ஏராளமான பொருட்களை இறக்குமதி செய்கிறது. துணிகள், குளிர்சாதன பெட்டிகள் முதல் நோய் எதிர்ப்பு மருந்துகள் என தோரயமாக 1,050 பொருட்களை சீனாவிலிருந்து நம் நாடு இறக்குமதி செய்கிறது. இது நம் நாடு இறக்குமதி செய்யும் மொத்த பொருட்களில் 50 சதவீதமாகும். தற்போது சீனாவின் தொழில்துறையை கொரோனாவைரஸ் முடக்கிவைத்துள்ளது.

சீன பொருட்கள்

மேலும், கொரோனாவைரஸ் காரணமாக சீனாவின் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்து பொருட்கள் இறக்குமதி செய்யவும் பயமாக உள்ளது. அதேசமயம் இறக்குமதி செய்யவில்லை என்றால் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் அபாயம் உள்ளது. இதனால் சீனாவுக்கு பதிலாக அந்த பொருட்களை வேறு எந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யலாம் என மத்திய அரசு தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது. உதாரணமாக, சீனாவிலிருந்து அதிகம் இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக்கல் மிஷினரி மற்றும் உதிரி பாகங்களை, பிரேசில் மற்றும் வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யலாம் மற்றும் உள்நாட்டிலும் கிடைக்கும்.

சீன பொம்மைகள்

மெக்சிக்கோ மற்றும் பிரேசில் நாடுகளிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு வரலாம். மோட்டார் பாகங்கள் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் ஆகியவற்றை சிலி, கொலம்பியா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யலாம். மேலும் உள்நாட்டில் இந்த பாகங்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆயத்த ஆடைகள் மற்றும் துணிகளை சீனாவுக்கு பதிலாக இலங்கை மற்றும் வங்க தேசம் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யலாம். கண், மருத்துவ மற்றும் சர்ஜிக்கல் கருவிகளை கொலம்பியா மற்றும் பிரேசிலிருந்து வரவழைக்கலாம். இந்தியாவிலும் இந்த கருவிகள் தயாரிக்கப்படுகிறது. பொம்மைகள் மற்றும் விளையாட்டுகள் பொருட்களை மெக்சிகோ மற்றும் பிரேசிலிருந்து இறக்குமதி செய்யலாம். அதேசமயம், சீனாவின் சப்ளை பாதிப்பால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப சாத்தியமான 500 முதல் 550 பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.