கொரோனாவைரசுக்கும் கோழிக்கும் சம்பந்தம் இல்லை….. உண்மையை நிரூபிக்க….. சிக்கனை வெளுத்து வாங்கிய தெலங்கானா அமைச்சர்கள்….

 

கொரோனாவைரசுக்கும் கோழிக்கும் சம்பந்தம் இல்லை….. உண்மையை நிரூபிக்க….. சிக்கனை வெளுத்து வாங்கிய தெலங்கானா அமைச்சர்கள்….

கோழிக்கறி மற்றும் முட்டைகளை சாப்பிடுவதால் கொரோனாவைரஸ் உண்டாகும் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளிவைக்கும், தெலங்கானா அமைச்சர்கள் மக்கள் முன்னிலையில் சிக்கன் சாப்பிட்ட நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது.

சீனாவுக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனாவைரஸால் அங்கு இதுவரை சுமார் 3 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மேலும், கொரோனாவைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனாவைரஸ் கோழிகள் வாயிலாக பரவுவதாகவும், கோழிக்கறி (சிக்கன்) மற்றும் முட்டைகளை சாப்பிடுபவர்களுக்கு கொரோனாவைரஸ் வந்து விடும் என கட்டுக்கதைகளும் மற்றும் வதந்திகளும் வேகமாக பரவி வருகிறது.

பிராய்லர் கோழிகள்

இதனால் சமீபகாலமாக கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் விற்பனை மந்தமானது. கொரோனாவைரஸ் வதந்திக்கு் முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் விற்பனை நிலவரம் மிகவும் மோசமாகி விடும் என்பதை உணர்ந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு, தெலங்கானா கோழி வளர்ப்போர் சங்கம், தெலங்கானா கோழி வளர்ப்பு கூட்டமைப்பு மற்றும் கோழி வளர்ப்பாளர்கள் இணைந்து, ஹைதராபாத்தில் பீப்பிள் பிளாசாவில் சிக்கன் மற்றும் முட்டை மேளாவை நடத்தினர். இந்த கண்காட்சியில் தெலங்கான அமைச்சர்கள் கே.டி. ராம ராவ், இ. ராஜேந்தர் மற்றும் சீனிவாஸ் கவுட் ஆகியோர் கலந்து கொண்டனர். 

சிக்கன் சாப்பிட்ட தெலங்கானா அமைச்சர்கள்

கோழிக்கும், கொரோனாவைரசுக்கும் எந்தசம்பந்தமுமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், அந்த கண்காட்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில், கோழி இறைச்சியில் சமைக்கப்பட்ட விதவிதமான உணவு வகைகள் மற்றும் முட்டைகளை தெலங்கான அமைச்சர்கள் ருசித்து சாப்பிட்டனர். தெலங்கானா அமைச்சர்கள் சிக்கனை ருசித்து சாப்பிடும் போட்டாக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.