கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் இதற்கு முன் அனுபவிக்காத ஒன்று – பிரிட்டன் இளவரசர் சார்லஸ்

 

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் இதற்கு முன் அனுபவிக்காத ஒன்று – பிரிட்டன் இளவரசர் சார்லஸ்

கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் குறித்து பிரிட்டன் இளவரசர் சார்லஸ் பேசியுள்ளார்.

லண்டன்: கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் குறித்து பிரிட்டன் இளவரசர் சார்லஸ் பேசியுள்ளார்.

கடந்த 25-ஆம் தேதி இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தற்போது 71 வயது ஆகிறது. அவர் உடல்நலத்தோடு இருப்பதாக அரச குடும்பம் தெரிவித்திருந்தது. அவரது மனைவிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு எதுவும் தென்படவில்லை. இளவரசர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கடந்த 30-ஆம் தேதி குணமடைந்தார்.

இந்த நிலையில், இளவரசர் சார்லஸ் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் பேசுகையில், ஒரு தேசமாக கடும் சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறோம். லட்ச்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். அத்துடன் மக்கள் உடல் நலனையும் இது அச்சுறுத்துகிறது. இந்த நிலை நிச்சயம் விரைவில் முடிவுக்கு வரும். அதுவரை அனைவரும் நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த நாட்கள் என்னுடைய வாழ்வில் இதற்கு முன் நான் எப்போதும் அனுபவிக்காத ஒன்றாகும். கொஞ்சம் கடினமாகவே இருந்தது. இருந்தாலும், ஒருவழியாக கொரோனாவை கடந்து வந்து விட்டேன். நான் குணமடைந்து விட்டாலும் இன்னும் சில நாட்கள் என்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

கொரோனா வைரஸ் தொற்று அனைவருக்கும் ஒரு பாடம். குடும்பம், நண்பர்கள் என மகிழ்ச்சியுடன் இருந்த இயல்பான நம்முடைய கட்டமைப்புகள் திடீரென அகற்றப்படும்போது அது வெறுப்பூட்டும் அனுபவமாக இருந்தது. கொரோனாவை எதிர்த்து தங்கள் உயிரைப் பணயம் வைத்து பிறரைக் காப்பாற்றும் மருத்துவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.