‘கொரோனவுக்கு எதிரான போரை வெல்லும் வரை வீட்டுக்கு செல்ல மாட்டேன்’.. 42 நாட்களாக ஆம்புலன்ஸில் வசிக்கும் டிரைவர்!

 

‘கொரோனவுக்கு எதிரான போரை வெல்லும் வரை வீட்டுக்கு செல்ல மாட்டேன்’.. 42 நாட்களாக ஆம்புலன்ஸில் வசிக்கும் டிரைவர்!

ஆம்புலன்ஸ் அதிகமாக தேவை என்பதாலும், தன் மூலம் தன் பிள்ளைகளுக்கு கொரோனா பரவக் கூடாது என்பதாலும் ஆம்புலன்ஸையே வீடாக மாற்றியுள்ளார். 

உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் வசித்து வருபவர் பாபு பார்த்தி. மருத்துவ மனை ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வரும் இவர், கடந்த 42 நாட்களாக வீட்டுக்கு செல்லாமல் மருத்துவமனையிலேயே இருந்து வருகிறாராம். தற்போது நிலவும் இக்கட்டான சூழலில், ஆம்புலன்ஸ் அதிகமாக தேவை என்பதாலும், தன் மூலம் தன் பிள்ளைகளுக்கு கொரோனா பரவக் கூடாது என்பதாலும் ஆம்புலன்ஸையே வீடாக மாற்றியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்து ஆம்புலன்சில் தான் தங்கி வருகிறேன் . இதுவரை என் வீட்டுக்கு ஒரு முறை கூட செல்லவில்லை. கொரோனா போரை எப்போது நாங்கள் வெல்கிறோமோ அப்போது தான் வீட்டுக்கு செல்வேன். நான் நலமாக தான் இருக்கிறேன் என்று என் குடும்பத்துக்கு தெரிவிக்கும் வகையில் தினமும் வீட்டுக்கு கால் செய்து தகவல் தெரிவித்து வருகிறேன் என்று கூறியுள்ளார். 

ttn

பார்த்தியின் இந்த சேவை குறித்து பேசிய மருத்துவர், கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்து பார்த்தி இங்கேயே தான் இருக்கிறார். இதுவரை மருத்துவமனைக்கு வந்த சுமார் 1,100 நோயாளிகளில் 700 நோயாளிகள் பார்த்தி அழைத்து வந்தவர்கள் தான். இரவு, பகல் பாராமல் இங்கேயே இருந்து வருகிறார் அவர். இங்கிருந்து 9 கி.மீ தூரத்தில் தான் பார்த்தி வீடு இருக்கும் நிலையிலும் கொரோனா முடியும் வரை வீட்டுக்கு போக மாட்டேன் என்று இங்கேயே இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். தற்போது கொரோனாவால் ஆரஞ்ச் கட்டத்தில் இருக்கும் சம்பல் மாவட்டத்தை பச்சைக்கு மாற்றுவதுதான் அவரின் குறிக்கோளாம். 

கொரோனா முதியவர்களை தான் அதிகமாக பாதிக்கும் என்ற நிலையிலும், 65 வயதான பார்த்தி கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தைரியமாக இறங்கியுள்ளார். ஆனால், தான் பயமின்றி உரிய பாதுகாப்புடன் பணியாற்றுவதாக பார்த்தி கூறியிருக்கிறார். அவரின் இந்த மகத்தான பணி அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.