கொடநாடு விவகாரம்: சயான், மனோஜ் ஜாமீன் ரத்து

 

கொடநாடு விவகாரம்: சயான், மனோஜ் ஜாமீன் ரத்து

கொடநாடு விவகாரத்தில் சயான் மற்றும் மனோஜுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்து நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

நீலகிரி: கொடநாடு விவகாரத்தில் சயான் மற்றும் மனோஜுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்து நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதியன்று கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். 

இந்த மர்ம மரணங்களுக்குப் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமூவேலிடம் வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான் வாக்குமூலம் அளித்திருந்தார். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரை தமிழக காவல்துறையினர் தில்லியில் கைது செய்து சென்னை கொண்டு வந்தனர்

காவல்துறையினர் விசாரணைக்குப் பிறகு, எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் சான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் இன்று ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், அவர்கள் இருவரும் ஆஜராகவில்லை. அதேசமயம், அவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கால அவகாசம் கோரினார். ஆனால், அதனை நிராகரித்த நீதிமன்றம், இருவரின் ஜாமீனையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.