கொடநாடு விவகாரம்: சயன், மனோஜை விடுவித்து நீதிபதி உத்தரவு

 

கொடநாடு விவகாரம்: சயன், மனோஜை விடுவித்து நீதிபதி உத்தரவு

கொடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயன் மற்றும் மனோஜ்ஆகிய இருவரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை: கொடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதியன்று கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். 

இந்த மர்ம மரணங்களுக்குப் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமூவேலிடம் வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான் வாக்குமூலம் அளித்திருந்தார். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரை தமிழக காவல்துறையினர் தில்லியில் கைது செய்து சென்னை கொண்டு வந்தனர்.

அவர்களிடம் எழும்பூரில் வைத்து 10 மணி நேரத்திற்கும் மேலாக மத்தியக் குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டார். மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் அன்பு, துணை ஆணையர் செந்தில் குமார் ஆகியோர் 2 பேரிடமும் தனித்தனியாக 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு இருவரையும் எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சரிதா முன் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சரிதா, கொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் ஆகியோர் மீது புகாரளித்தவர்களிடம் விசாரணை நடத்தினீர்களா? என சரமாரி கேள்விகளை எழுப்பினார். அத்துடன், சந்தேகங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே சயான் மற்றும் மனோஜை விசாரணை காவலில் அனுப்ப முடியும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

சில மணிநேரம் எடுத்துக்கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னை சைதாப்பேட்டையில் இருக்கும் நீதிபதி குடியிருப்பில் உள்ள நீதிபதி சரிதா முன் அழைத்து வந்து அவர்களை மீண்டும் ஆஜர்படுத்தினர். அப்போதும், நீதிபதி சில கேள்விகளை எழுப்பினார். இறுதியாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் அளித்த தகவல் போதுமானதாக இல்லை என்று கூறி நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி சரிதா மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணை வருகிற 18-ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெறவுள்ளது.