கே.பாக்யராஜின் சின்னவீட்டை வம்புக்கு இழுத்த ஏ.ஆர்.முருகதாஸ்!

 

கே.பாக்யராஜின் சின்னவீட்டை வம்புக்கு இழுத்த ஏ.ஆர்.முருகதாஸ்!

தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ பட கதை திருட்டு விவகாரத்தில் கே.பாக்யராஜின் ‘சின்ன வீடு’ படத்தை இயக்குநர் முருகதாஸ் சீண்டியுள்ளார்.

சென்னை: தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ பட கதை திருட்டு விவகாரத்தில் கே.பாக்யராஜின் ‘சின்ன வீடு’ படத்தை இயக்குநர் முருகதாஸ் சீண்டியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவ.6ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்தின் கதை தன்னுடையது என்று வருண் ராஜேந்திரன் என்பவர் புகார் தெரிவித்தார். இவரது புகாரை ஏற்ற தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் வருணின் ‘செங்கோல்’ என்ற கதையும், ‘சர்கார்’ கதையும் கிட்டத்தட்ட ஒன்று தான் என கூறி அறிக்கை வெளியிட்டது.

இதனையடுத்து, இயக்குநர் முருகதாஸ் சமரசம் வேண்டாம், நீதிமன்றத்தை வழக்கை சந்திக்கப்போவதாக தெரிவித்தார். இதன் காராணமாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவரான இயக்குநர் கே.பாக்யராஜ் மீது முருகதாஸ் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. தனது கதையை முழுவதும் படிக்காமல், படத்தை பார்க்காமல் ஒரு தலைபட்சமாக கே.பாக்யராஜ் கருத்து தெரிவித்திருப்பது முறையல்ல என பேட்டி ஒன்றில் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்விவகாரத்தில் தனது தரப்பு வாதத்தினை முழுமையாக கேட்டு அறியாமல் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். முதல்வர் மரணம், திருநெல்வேலி சம்பவம் என சமீபத்திய பிரச்னைகள் எனது படத்தில் பேசபட்டுள்ளதாகவும், இதை எப்படி 2007ல் பதிவு செய்த கதையுடன் ஒப்பிட முடியும் என்றும் முருகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விவகாரத்தில் கே.பாக்யராஜின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ள இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ‘சின்ன வீடு’ படம் என்ன காப்பியா என கேள்வி எழுப்பியுள்ளார். கே.பாக்யராஜ் கதை எழுதி, இயக்கி, நடித்த ‘சின்ன வீடு’ திரைப்படமும், மணிவண்ணன் இயக்கிய ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தின் கதையும் கிட்டதட்ட ஒன்று தான். அப்படி என்றால், ‘சின்ன வீடு’ படம் காப்பியடிக்கப்பட்டதா என முருகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், சர்கார் கதை திருட்டு விவகாரம் குறித்து நடிகர் விஜய்யிடம் பேசியபோது, தர்மசங்கடமாக உணர வேண்டாம். உங்கள் பணியை நீங்கள் பாருங்கள். இந்த விவகாரத்தை இயக்குநர் பார்த்துக் கொள்வதாக சொன்னார் என்று கூறியதாக கே.பாக்யரஜ் தெரிவித்துள்ளார்.