கேரள வெள்ள நிவாரண கணக்கெடுப்புக்கு ஸ்மார்ட்போன் கொண்ட வாலண்டியர்கள் தேவை!

 

கேரள வெள்ள நிவாரண கணக்கெடுப்புக்கு ஸ்மார்ட்போன் கொண்ட வாலண்டியர்கள் தேவை!

கடந்த 2018ஆம் ஆண்டு கேரளாவில் வந்த பெருவெள்ளத்தின்போது……’ஹே ஹே நிறுத்து நிறுத்து, அதென்ன 2018ல வந்த வெள்ளத்தின்போது, அங்கதான் வருஷா வருஷம் வெள்ளம் வருதே’….சரீங்கணா, அப்படியும் சொல்லலாம். விஷயத்துக்குள்ள போவோமா? கடந்த வருட வெள்ளத்தின்போது ஏற்பட்ட பாதிப்புகளை துல்லியமாக மதிப்பிட முடியாமல் போனது. விளைவாக, மிக கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காமல் அது ஒரு பிரச்னையாக உருவெடுத்தது. வீடு இழந்தவர்களுக்கு இத்தனை லட்சம், ஆடுமாடு இழந்தவர்களுக்கு இத்தனை ஆயிரம், மரங்களை இழந்தவர்களுக்கு இத்தனை ஆயிரம் என குத்துமதிப்பாக அளித்துவந்த நிவாரணம் செல்லுபடியாகவில்லை. எனவே, யோசித்த கேரள அரசு அதற்கென மாற்று ஏற்பாடு செய்துவிட்டது.

இந்த வருடமும் மழை, வெள்ளம், நிலச்சரிவு என திரும்பவும் அதே களேபரம். எனவே, இந்தமுறை பாதிப்புகளை துல்லியமாக கணக்கிடுவதற்கு தன்னார்வலர்கள் தேவை என அறிவித்துவிட்டது. ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எந்த ஒரு கேரளவாசியும் வாலண்டியராக சேரலாம். அந்தந்த பகுதிகளில் இருக்கும் அரசு அதிகாரிகள்மூலம் தன்னார்வலர்களுக்கு ஏரியா ஒதுக்கப்படும். அரசு அதிகாரிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று, பாதிப்பின் தன்மை, தீவிரம் உள்ளிட்டவற்றை ஆவணமாக்கி அரசுக்கு தரவேண்டும். சமர்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கப்படுமாம். செமல்ல!