கேரள நர்ஸ் ஒருவருக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு

 

கேரள நர்ஸ் ஒருவருக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு

சவுதி அரேபியாவில் கேரளாவை சேர்ந்த நர்ஸ் ஒருவருக்கு கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

திருவனந்தபுரம்: சவுதி அரேபியாவில் கேரளாவை சேர்ந்த நர்ஸ் ஒருவருக்கு கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 25 பேர் பலியாகி உள்ளதாகவும், 830 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், சவுதி அரேபியாவில் பணிக்கு சென்ற கேரளாவை சேர்ந்த நர்ஸ் ஒருவருக்கு கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்நாட்டின் அபாவில் உள்ள அல் ஹயத் மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ்கள் 30 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

kerala nurse

இதில் கேரளாவை சேர்ந்த நர்ஸ் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு அவர் சிகிச்சை அளித்தபோது நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த நர்ஸ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சவுதி அரேபியாவில் பாதிக்கப்பட்டுள்ள கேரள நர்ஸ்க்கு உரிய சிகிச்சை அளித்து அவரை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.