கேரள கன்னியாஸ்திரி பாலியல் வழக்கு: பிஷப் பிராங்கோவிற்கு நிபந்தனை ஜாமீன்

 

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வழக்கு: பிஷப் பிராங்கோவிற்கு நிபந்தனை ஜாமீன்

கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிஷப் பிராங்கோவிற்கு நிபந்தனை ஜாமீன் அளித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

திருவனந்தபுரம்: கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிஷப் பிராங்கோவிற்கு நிபந்தனை ஜாமீன் அளித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் தேவாலய பேராயர் பிராங்கோ மூலக்கல் மீது கோட்டயம் அருகே குருவிளங்காடு பகுதியில் உள்ள தேவாலயத்தில் கன்னியாஸ்திரியாக இருந்த பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இதுகுறித்து காவல்நிலையத்தில் அவர் அளித்துள்ள புகாரில், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை சுமார் 13 தடவை தன்னிடம் பிராங்கோ அத்துமீறியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, பேராயரை கைது செய்யக் கோரி திருவனந்தபுரத்தில் கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணைக்காக திருப்புனித்துராவில் உள்ள கேரள குற்றப்பிரிவு காவல் அலுவலகத்தில் பிராங்கோ ஆஜரானார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை போலீஸ் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்தனர். போலீஸ் காவல் நிறைவடைந்ததையடுத்து, நீதிமன்ற காவலில் பிராங்கோ சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, ஜாமீன் கோரி பிராங்கோ தரப்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், பிஷப் பிராங்கோவிற்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவுக்குள் நுழைய கூடாது, நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை சமர்பிக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை நீதிமன்றம் அவருக்கு விதித்துள்ளது.