கேரளாவில் மசூதியில் தடபுடலாக நடந்த இந்து திருமணம்….. 4 ஆயிரம் பேருக்கு சைவ விருந்து அளித்து அசத்திய மசூதி நிர்வாகம்

 

கேரளாவில் மசூதியில் தடபுடலாக நடந்த இந்து திருமணம்….. 4 ஆயிரம் பேருக்கு சைவ விருந்து அளித்து அசத்திய மசூதி நிர்வாகம்

கேரளாவில் காயம்குளம் மசூதி வளாகத்தில் நேற்று இந்து மணமக்களுக்கு இந்து முறைப்படி திருமணம் வெகுசிறப்பாக நடைபெற்றது. மேலும் திருமணத்துக்கு வந்த 4 ஆயிரம் பேருக்கு 2 பாயாசத்துடன் முழுக்க முழுக்க சைவ விருந்து அளித்து மசூதி நிர்வாகம் அசத்தி விட்டது.

காயம்குளம் சேரவள்ளி முஸ்லிம் ஜமாத் குழுவின் செயலர் நுஜூமுதீன் அலுமமோத்தில் இது குறித்து கூறுகையில், மணமகள் அஞ்சுவின் அப்பாவை எனக்கு தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல தெரியும். அவர் இறந்ததால் அந்த குடும்பத்துக்கு உதவி செய்ய விரும்பினேன். மறைந்த அசோக்குமாரின் மனைவி பிந்து கடந்த அக்டோபர் மாதம் தனது 24 வயது மகளான அஞ்சுவின் திருமணத்தை நடத்த உதவிகோரி விண்ணப்பம் அளித்தார்.

மசூதியில் இந்து முறைப்படி நடைபெற்ற திருமணம்

அந்த விண்ணப்பத்தை கமிட்டி உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டு அது குறித்து விவாதித்து கல்யாணத்துக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய நாங்கள் முன்வந்தோம். மசூதி வளாகத்தில் இந்து முறைப்படி அஞ்சுக்கு திருமணம் நடத்த முடிவு செய்தோம்.அதன்படி, அஞ்சுக்கும், கபில் கிபிஷக்கும் இன்று (நேற்று) மசூதி வளாகத்தில் இந்து முறைப்படி புரோகிதர் திருமணத்தை நடத்தி வைத்தார். 

புதுமண தம்பதிகள் ஊர் தலைவர்களுடன்

மேலும் மசூதி வளாகத்தில் கல்யாணத்துக்கு வந்த சுமார் 4 ஆயிரம் பேருக்கு 2 பாயாசம் உள்பட சைவ விருந்து தடபுடலாக நடந்தது. திருமணம் முடிந்த பிறகு மணமக்கள் மசூதிக்குள் வந்து இமாம் ரியாசுதீனிடம் ஆசிர்வாதம் வாங்கினர். சேரவள்ளி முஸ்லிம் ஜமாத் கமிட்டி சார்பாக மணமக்களுக்கு திருமண பரிசாக 10 சவரன் தங்கம் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கேரள முதல்வர் பினராய் விஜயன் இந்த திருணம் குறித்து கூறுகையில், கேரளாவின் ஒற்றுமைக்கு இந்த திருமணம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. புதிதாக திருமணமான தம்பதிகள், மசூதி அதிகாரிகள் மற்றம் சேரவள்ளி மக்களுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்  என தெரிவித்தார்.