கேரளாவில் புதிய அணை: மத்திய அரசு அனுமதி

 

கேரளாவில் புதிய அணை: மத்திய அரசு அனுமதி

புதிய அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கையை தயார் செய்ய கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது

திருவனந்தபுரம்: புதிய அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கையை தயார் செய்ய கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணைக்குப் பதில் அங்கு புதிய அணை கட்ட கேரள அரசு பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. அவ்வாறு புதிய அணை கட்டினால் அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறும் செயல் என கூறி தமிழக அரசு அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேலும், 120 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், எனவே, அணை நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு மே 2-ம் தேதி உத்தரவிட்டது. எனினும், புதிய அணையை கட்ட கேரளா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை  7 நிபந்தனைகளுடன் மேற்கொள்ள கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த நிபந்தனைகளில், முல்லை பெரியாறுக்கு மாற்றமாக புதிய அணை கட்டும் ஆய்வை தொடங்க தமிழக அரசின் அனுமதி கட்டாயம். சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை சமர்ப்பிக்கவும் கேரளா, தமிழக அரசின் அனுமதியை பெற வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.