கேரளாவில் சிறுவனை தாக்கிய வெஸ்ட் நைல் காய்ச்சல்; கொசுக்கள் மூலமாக பரவும் நோய்களை எவ்வாறு தடுப்பது?

 

கேரளாவில் சிறுவனை தாக்கிய வெஸ்ட் நைல் காய்ச்சல்; கொசுக்கள் மூலமாக பரவும் நோய்களை எவ்வாறு தடுப்பது?

கேரள மாநிலத்தில் சிறுவன் ஒருவன் வெஸ்ட் நைல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் சிறுவன் ஒருவன் வெஸ்ட் நைல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெஸ்ட் நைல் காய்ச்சல்:

மேற்கு நைல் காய்ச்சல் (West Nile Fever) என்பது கொசு மூலம் மனிதர்களுக்கு பரவுகின்ற வைரஸ் தொற்று ஆகும். கொசுக்களுக்கு, பாதிக்கப்பட்ட பறவைகளிடம் இருந்து இந்த வைரஸ் தோற்று பரவுகிறது.

ஆனால், சாதாரணமாக ஒரு கொசு கடித்தால் வெஸ்ட் நைல் காய்ச்சலால் பாதிக்கப்படுவோம் என்று அர்த்தமில்லை. மாறாக, அறிகுறிகளுடன் மூலமே இதனை அறிய முடியும். அவ்வாறு அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது.

வெஸ்ட் நைல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக இரண்டு முதல் 14 நாட்களுக்குள் அறிகுறிகளை உணரத் தொடங்குவர். காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறிய சிவப்பு புடைப்புகள், திடீர் தசை பலவீனம் உள்ளிட்ட அறிகுறிகளை பாதிக்கப்பட்டவர் உணருவர். அறிகுறிகளின் வகைகள் மற்றும் தீவிரத்தன்மை பாதிக்கப்பட்ட நரம்பு மண்டலத்தின் பாகங்களில் பெரும்பாலும் சார்ந்திருக்கும்.

கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சல்:

இந்நிலையில், கேரள மாநிலத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் வெஸ்ட் நைல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது மிகவும் அரிதான ஒன்று. கடந்த ஆண்டில் ஒன்றிரண்டு பேர் மட்டுமே இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இந்த நோய் பரவாது. கொசுக்கள் மூலமாக மட்டுமே பரவும். எனவே, மக்கள் தேவையில்லாமல் பீதியடைய வேண்டாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மலேரியா:

கொசுக்களால் பரவும் மற்றொரு முக்கியமான நோய் மலேரியா. மலேரியாவால் ஆண்டு முழுவதும் பலர் பாதிக்கப்பட்டாலும், கோடை காலங்களில் அதிகமாக பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிகின்றனர். எனினும், நடப்பாண்டில் மலேரியா குறித்து அதிகளவில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை குறையும் என நம்புகிறோம். ஆனாலும், சிகிச்சை அளிக்கக் நாங்கள் தயாராக இருக்கிறோம் என மலப்புரம் மாவட்ட மருத்துவ அலுவலர் சகினா தெரிவித்துள்ளார்.

அறிகுறிகள்:

பெரும்பாலும், மலேரியா நோய் தொற்றிய 6 முதல் 30 நாட்களின் பின்னர்தான் அறிகுறிகள் தோன்றும். குழந்தைகளே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கடுமையான காய்ச்சல் ஏற்படும். தலைவலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளும் தென்படும். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நலம். இல்லையென்றால் மோசமான விளைவுகளை மலேரியா ஏற்படுத்த கூடும்.

எப்படி பரவுகிறது:

‘பிளாஸ்மோடியம்’ என்னும் ஒட்டுண்ணிக் கிருமிகள்தான் மலேரியாவுக்கு மூலக் காரணம். இந்தக் கிருமிகளில் பால்சிபேரம், மலேரியே, ஒவேல், விவாக்ஸ் என்று மொத்தம் 4 வகைகள் உள்ளன. இவை பெண் அனாபிலிஸ் கொசுக்களிடம் வசிக்கின்றன. இக்கொசுக்கள், நம்மை கடிக்கும் போது கொசுக்களின் உமிழ்நீர் வழியாக மலேரியா கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்துவிடும்.

இந்த கிருமிகள் ரத்தத்தின் வழியாக கல்லீரலில் இருக்கும் செல்களுக்குள் நுழைகின்றன. அங்கு அவை பல மடங்காக பெருகுகின்றன. ஈரலில் இருக்கும் செல் வெடிக்கும்போது இந்த கிருமிகள் வெளியே வருகின்றன. இந்த கிருமிகள் சிவப்பு அணுக்களைத் தாக்குகின்றன. அங்கு அவை மேலும் பெருகுகின்றன. ஒரு சிவப்பு அணு வெடிக்கும்போது அது கிருமிகளை வெளியிடுகிறது. இந்த கிருமிகள் மேலும் பல சிவப்பு அணுக்களைத் தாக்குகின்றன. இப்படி இந்த கிருமிகள் பல மடங்காக பெருகுகிறது. ஒவ்வொரு தடவை சிவப்பு அணுக்கள் வெடிக்கும்போதும் மலேரியாவுக்கான அறிகுறிகள் தெரியவருகின்றன.

எவ்வாறு தடுப்பது: 

அடர்ந்த நிறமுள்ள உடைகள் கொசுக்களை ஈர்க்கும். எனவே மிதமான வண்ணமுடைய உடைகளை உடுத்துவது சிறந்தது மற்றும் இது கொசுக்கள் நம்மை அண்டவிடாமல் காக்கும். வீடுகளில் கொசுவலைகளை பயன்படுத்த வேண்டும். துளசி மலேரியா காய்ச்சல் அறிகுறிகளை குறைக்கும் மற்றொரு சிறந்த மூலிகை. துளசி இலைச்சாறு சிறிதளவு எடுத்து அதனுடன் கருமிளகுத்தூள் கலந்து குடிக்கவும். இது மலேரியாவை எளிதில் குணப்படுத்தும்.

டெங்கு:

டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய `ஏடிஸ் ஏஜிப்தி’ (Aedes Aegypti) என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. `ஏடிஸ்’ கொசுக்கள் மூன்று வாரங்களுக்குமேல் உயிர்வாழும். பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும்.

எப்படி பரவுகிறது:

வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், தண்ணீர் பிடிப்பதற்காக பைப்லைன்கள் அருகே தோண்டப்பட்ட குழிகள், மொட்டைமாடிகளில் போட்டுவைத்திருக்கும் உபயோகமற்ற பொருள்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், பயனற்ற பொருள்கள்,  வீடுகளில் சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள், மேல்நிலைத் தொட்டிகள், டயர்கள், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்டகாலமாகக் கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் `ஏடிஸ்’ கொசுக்கள் முட்டையிட்டுப் பெருகுகின்றன. இது டெங்கு பாதிப்புள்ளவர்களைக் கடித்துவிட்டு மற்றவர்களைக் கடிக்கும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது.

எவ்வாறு தடுப்பது:

கொசுக்கள் உருவாகும் இடங்களை அழித்து சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டால் மட்டுமே இந்தக் கொசுக்களின் வளர்ச்சியைத் தடுக்க முடியும்.