கேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்; சபரிமலைக்கு சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம்

 

கேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்; சபரிமலைக்கு சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம்

கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கவுள்ள நிலையில், கேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது

திருவனந்தபுரம்: கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கவுள்ள நிலையில், கேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் கடந்த மாதம் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது.அப்போது, பெண்கள் பலர் சபரிமலைக்கு வந்தனர். அவர்களை ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதையடுத்து, சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 5-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. அப்போதும் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் யாரும் கோயிலுக்குள் செல்லவில்லை.

 

இதனிடையே, சபரிமலை விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது நவம்பர் 13-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

இந்நிலையில், கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படவுள்ளது. இதற்கு முன்பு, சபரிமலை தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக கேரளாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் தலைமை தாங்குகிறார்.

 

முன்னதாக, சபரிமலைக்கு செல்ல முயன்ற பத்திரிக்கையாளர்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.