கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் – மக்கள் அவதி

 

கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் – மக்கள் அவதி

கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் செய்து வருவதால் தமிழகத்தில் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னை: கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் செய்து வருவதால் தமிழகத்தில் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பான்மையான நகரங்களில் வசித்து வரும் மக்கள் கேன் குடிநீரை நம்பியே தங்கள் வாழ்க்கையை கடத்தி வருகின்றனர். அதிலும் தற்போது இந்த கேன் குடிநீர் பயன்பாடு கிராமங்கள் வரை பரவி வருகிறது. பருவ மழை பொய்த்ததால் கிராமங்களில் உள்ள கிணறுகள், ஏரிகள், குளங்களில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது.

ttn

பெரும்பாலான தமிழக மாவட்டங்களில் ராட்சத மோட்டார் பொருத்தி நிலத்தடி நீரை உறிஞ்சி கேன் வாட்டர் விற்பனை செய்கின்றனர். இதனால் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 300 முதல் 500 அடிக்கு கீழே சென்றுவிட்டது. இதனால் நிலத்தடி நீர் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. சட்டவிரோதமாக செயல்படும் கேன் குடிநீர் நிறுவனங்களை உடனடியாக மூட வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக செயல்படும் குடிநீர் ஆலைகளை கண்டறிந்து அந்த நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். அதனால் நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமத்தை எளிய முறையில் பெறுவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு உருவாக்க வலியுறுத்தி கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் கடந்த வியாழக்கிழமை முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் அவர்களது போராட்டம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடைகளில் கேன் குடிநீர் ரூ.50 வரை விற்கப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.