கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் பார்த்தானாம்: டிடிவி தினகரனை கலாய்த்த அமைச்சர் ஜெயக்குமார்

 

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் பார்த்தானாம்: டிடிவி தினகரனை கலாய்த்த அமைச்சர் ஜெயக்குமார்

டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் ராஜினாமா செய்து விட்டுத் திரும்ப நின்று ஜெயிக்கட்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை: டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் ராஜினாமா செய்து விட்டுத் திரும்ப நின்று ஜெயிக்கட்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அஇஅதிமுக- வின்  47ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர்களுடன் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் எம்.ஜி.ஆரால் இதே நாளில் ஆரம்பித்த இயக்கமாகும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த இயக்கம் சிதறி விடும். சுக்கு நூறாகி விடும் என நினைத்தனர். ஆனால் அது நடக்கவில்லை. அ.தி.மு.க. தொண்டர்களும் மக்களும் இந்த இயக்கத்தை எழுச்சியோடு பார்க்கிறார்கள். இன்னும் 3 ஆண்டில் பொன்விழா வருகிறது. அதையும் நாங்கள் தான் கொண்டாடுவோம். 100 ஆண்டு வரும்போது அந்த விழாவையும் நாங்கள்தான் கொண்டாடுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

‘அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் மீட்கப் போவதாக தினகரன் கூறுகிறார். அவரால் அது முடியவே முடியாது. கட்சியையும், ஆட்சியையும் பிடிக்க நினைக்கிறார். அதுவும் முடியாது. முதலில் அவர் ஆர்.கே.நகரில் ராஜினாமா செய்து விட்டுத் திரும்ப நின்று ஜெயிக்கட்டும். அதுவும் அவரால் முடியாது. எனவே கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் பார்த்தானாம். அந்த மாதிரி கதையாக உள்ளது.  அவரிடம் ஏதோ ஒரு 5 சதவீதம் அளவுக்கு ஆட்கள் உள்ளனர். அவர்களுக்காக ஏதேதோ சொல்கிறார். மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. ஆட்சியை ஊழல் ஆட்சி என்கிறார். ஊழலின் மொத்த உருவமே மு.க.ஸ்டாலின்தான். உலகத்திலேயே ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான். சர்க்காரியா கமி‌ஷனை மறந்து விட்டு அவர் பேசக்கூடாது. எனவே மக்கள்தான் இறுதி எஜமானார்கள். அடுத்து வரும் தேர்தல்களிலும் நாங்கள்தான் ஜெயிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.