கூத்தாண்டவர் இப்போதிருக்கிற ஊருக்கு எப்படி வந்தார் என்ற கதை தெரியுமா!?

 

கூத்தாண்டவர் இப்போதிருக்கிற ஊருக்கு எப்படி வந்தார் என்ற கதை தெரியுமா!?

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டத்தில் இருக்கும் அருணாபுரம் கிராமத்தில் இப்போது குடிகொண்டுள்ள கூத்தாண்டவர் 515 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் மாவட்டம் செங்கத்தில் இருந்து கடத்தி வரப்பட்டவர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டத்தில் இருக்கும் அருணாபுரம் கிராமத்தில் இப்போது குடிகொண்டுள்ள கூத்தாண்டவர் 515 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் மாவட்டம் செங்கத்தில் இருந்து கடத்தி வரப்பட்டவர். அதுவும் பக்தனால் அல்ல ஒரு திருடனால்!

மேல் செங்கம் கிராமத்தில் ஒரு பக்தர் கூத்தாண்டவரை ஒரு பெட்டியில் வைத்து வணங்கி வந்தார். அவர் வீட்டில் புகுந்த திருடன் ஒருவன் பெட்டி கணமாக இருந்ததால் உள்ளே விலையுயர்ந்த பொருட்கள் இருக்கும் என்று எண்ணி தூக்கிக்கொண்டு வந்துவிட்டான்.

koothandavar

செங்கத்திலிருந்து தலையில் பெட்டியோடு நடந்த திருடன்,இடையிடயே பெட்டியை திறக்க முயன்றும்  முடியாமல் போனது.அருணாபுரம் அருகிலுள்ள கல்லந்தல் கிராம எல்லையில் இருந்த செவந்தல் ஏரிக்கரை முனியப்பன் கோவில் அருகே வந்தபோது,மிகவும் களைத்துபோனான்.

கோவில் அருகே இருந்த பாறை மீது பெட்டியை வைத்துவிட்டு சற்றே ஓய்வெடுக்க, பெட்டிக்குள் இருந்த கூத்தாண்டவர் வெளியே வந்து அருகில் இருந்த அத்தி மரத்தில் ஏறிக்கொண்டார். இதைப்பார்த்த திருடன் பயந்து ஓடிவிட்டான்.அன்றிரவு அருணாபுரம் ஊர் பெரியமனிதர் ஒருவரது கனவில் வந்த கூத்தாண்டவர் ‘தான் ஏரிக்கரை எதிரில் உள்ள குகையில் இருக்கிறேன்’என்று சொல்ல ஊர்மக்கள் திரண்டு போய் வழிபாடு செய்து அந்தக் குகைக்கு ஒரு கதவும் செய்து பொருத்தி இருக்கிறார்கள். 

koothandavar

ஆனால், மறுநாள் காலை அந்த கதவு ஏரிக்குள் கிடந்திருக்கிறது.மறுபடியும் கனவில் வந்த கூத்தாண்டவர் நான் ஊரைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.கதவு வைத்து மறைக்க வேண்டாம் ,அதனால்தான் நீங்கள் போட்ட கதவை தூக்கி எறிந்துவிட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.

மக்கள் அந்தக் கதவை எடுத்துப் போய்,அருணாபுரம் மாரியம்மன் கோவிலில் பொருத்தி விட்டார்கள். அந்தக் கதவு இப்போதும் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த கூத்தாண்டவருக்குத்தான் வருடந்தோறும் விழா எடுக்கிறார்கள். விழா பாரதபோர் நடந்த 18 நாட்களை நினைவுகூறும் வகையில் பதினெட்டு நாட்கள் நடைபெறும்.

தினமும் பாரதக்கதை செற்பொழிவு நடைபெறும். 14-ஆம் நாள் சுவாமிக்கு திருநங்கைகள் தாலிகட்டிக்கொள்வார்கள். இரவு முழுவதும் ஆட்டமும் பாட்டுமாக இருக்கும்.அதோடு,அன்று இரவு சுவாமி திருமண கோலத்தில் வீதியுலா வருகிறார். 15 நாள் சித்திரை தேர் திருவிழாவில் கூத்தாண்டவர் போர்கோலத்தில் ஊர்வலம் வருவார்.

koothandavar

மறுநாள் பொழுது விடிந்ததும் அரவானை அலங்கரிக்கப்பட்ட தேரில் நான்கு கி.மீ தொலைவில் உள்ள அமுதகளம் என்கிற கொலைக்களத்துக்கு கொண்டு வருவார்கள்.அங்கே,அரவானை பார்த்து திரு நங்கைகள் அழுது ஒப்பாரி வைப்பார்கள்.

அதையடுத்து அரவான் தலை துண்டிக்கபடும்.இதையடுத்து திருநங்கைகள் தங்கள் பொட்டை.அழித்து,பூவை எடுத்து,வளையல்களை உடைத்து வெள்ளை உடையணிந்து கைம்பெண் கோலம் பூணுவதுடன் விழா நிறைவு பெறும். இந்த பதினெட்டு நாட்களில் இந்தப் பகுதி மக்கள் திருமணம் போன்ற எந்த மங்கல நிகழ்வுகளையும் நடத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 1800 ஆண்டு பழமையான கண்ணகி கோவில் திருவிழா! வருகிற சித்திரை 19-ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.