கூடுதலாக 22 சதவீத பஸ்கள் இயக்கம்…. இன்று வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டால் ரூ.6 லட்சம் வரை இழப்பீடு – மேற்கு வங்க அரசு தகவல்

 

கூடுதலாக 22 சதவீத பஸ்கள் இயக்கம்…. இன்று வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டால் ரூ.6 லட்சம் வரை இழப்பீடு – மேற்கு வங்க அரசு  தகவல்

நாடு வேலைநிறுத்தத்தை முன்னிட்டு இன்று மேற்கு வங்கத்தில் கூடுதலாக 22 சதவீத பஸ்கள் இயக்கப்படும் என்றும், வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டால் ரூ.6 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும் என மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்தும், பரிந்துரைக்கப்பட்ட தொழிலாளர் சீர்திருத்தத்தை நீக்குதல், குறைந்தபட்ச மாத ஊதியத்தை ரூ. 21,000-24,000 உயர்த்துதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயாக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பது உள்பட  14 கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட 10 மத்திய வர்த்தக தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. 

மம்தா பானர்ஜி

இன்று நடைபெறும் வேலைநிறுத்ததால் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்காமல் இருக்க அனைத்து மாநில அரசுகளும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான  அரசு இன்று கூடுதலாக 22 சதவீத பஸ்கள் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில போக்குவரத்து துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை (இன்று) கூடுதலாக 22 சதவீத பஸ்கள் இயக்கப்படும்.

மேற்கு வங்க போக்குவரத்து

மேற்கு வங்க மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் ரூ.6 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும் வகையில் போக்குவரத்து துறை இன்ஸ்யூரன்ஸ் செய்துள்ளது. அதனால் புதன்கிழமை அதிகாலை 00.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணிக்குள் எந்தவொரு வாகனத்துக்கும் சேதம் ஏற்பட்டால் அந்த இன்ஸ்யூரன்ஸ்கீழ் இழப்பீடு கிடைக்கும். செல்லத்தக்க பதிவு சான்றிதழ், அனுமதி, தகுதி சான்றிதழ் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவை வாகனங்களில் இருக்க வேண்டும். மேலும் சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள் எப்.ஐ.ஆர். பதிவு செய்து இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.