கூடிய சீக்கிரம் என்னை அவங்க வரவேற்பார்கள்……. பொடி வைச்சு பேசிய ரஞ்சன் கோகாய்

 

கூடிய சீக்கிரம் என்னை அவங்க வரவேற்பார்கள்……. பொடி வைச்சு பேசிய ரஞ்சன் கோகாய்

தனது பதவியேற்பின் போது வெளியேறிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விரைவில் என்னை வரவேற்பார்கள் என நேற்று உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், மாநிலங்களவையின் புதிய உறுப்பினருமான ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய். இவர் கடந்த ஆண்டு நவம்பரில்தான் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ரஞ்சன் கோகாய் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னதாக,  பல தசாப்தங்களாக சவ்வாக இழுத்து வந்த அயோத்தி வழக்கு, பா.ஜ.க. அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்த ரபேல் வழக்கு, சபரிமலை வழக்கு போன்ற முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கினார்.

மாநிலங்களவை

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மாநிலங்களவை நியமன உறுப்பினராக ரஞ்சன் கோகாயை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று காலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நியமனம் உறுப்பினராக ரஞ்சன் கோகாய் பதவியேற்று கொண்டார். ரஞ்சன் கோகாய் பதவி ஏற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதேசமயம், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் ரஞ்சன் கோகாய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ரஞ்சன் கோகாய்

பதவியேற்பு முடிவடைந்தபிறகு அவையிலிருந்து வெளியே வந்த ரஞ்சன் கோகாயிடம் செய்தியாளர்கள் எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது குறித்து கேட்டதற்கு அவர் பதிலளிக்கையில், அவர்கள் (எதிர்க்கட்சி உறுப்பினர்கள்) விரைவில் என்னை வரவேற்பார்கள். விமர்சர்கள் இல்லை என தெரிவித்தார். தன்னை புறக்கணித்தவர்கள் விரைவில் வரவேற்பார்கள் என ரஞ்சன் கோகாய் கூறியது ஏதோ ஒரு விஷயத்தை மனதில் வைத்து பொடி வைச்சு பேசியது போல் இருக்கிறது என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.