‘குழந்தை வளர்ப்பது எப்படி?’ – பாட்டுப் பாடி செய்தி சொல்லிய அமைச்சர் ஜெயக்குமார்!

 

‘குழந்தை வளர்ப்பது எப்படி?’ – பாட்டுப் பாடி செய்தி சொல்லிய அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை: குழந்தைகள் தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார், குழந்தை வளர்ப்பு குறித்து பாடல் பாடி அசத்தியுள்ளார்.

தமிழகப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி.மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும், மீன்வளம் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என நிரம்பி வழிந்த விழா அரங்கில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “மனிதன் குழந்தை கேரக்டராக இருக்க வேண்டும், அப்போதுதான் மகிழ்ச்சியோடு இருக்க முடியும். உள்ளத்தில் குழந்தையாய், எண்ணத்தில் குழந்தையாய் இருக்க வேண்டும். வீரமா, செல்வமா, கல்வியா என்றால் கல்விக்குத்தான் முதலிடம் தந்திருக்கிறார்கள். எந்தச் செல்வமும் அழிந்துவிடும். கல்விச் செல்வம் அழியாத செல்வம்.

 

`எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் 

மண்ணில் பிறக்கையிலே… 

பின் நல்லவராவதும் தீயவராவதும் 

அன்னை வளர்ப்பதிலே… அன்னை வளர்ப்பதிலே…’ 

 

ஆகவே, அன்னையின் வளர்ப்பே குழந்தையை சமுதாயத்தில் மிகச் சிறந்தவர்களாக மாற்றும். குழந்தை பிறக்கும்போது எந்த மொழியையும் கற்றுக்கொள்ளும். ஆனால், அது எந்த மாநிலத்தில் வளர்கிறதோ அந்த மாநிலத்தின் மொழியைத்தான் கற்றுக்கொள்கிறது. குழந்தை பன்முகத் திறமை கொண்டதாக இருக்கும். குழந்தைகளின் திறன் என்ன என்பதைக் கண்டறிந்து அதற்குத் தகுந்தாற்போல் பயிற்சியளித்தால் அந்தக் குழந்தை வாழ்க்கையில் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறதோ அந்த நிலையை நிச்சயமாக அடையும்” என பேசியுள்ளார்.

குழந்தைச் செல்வம் எப்படி வளர வேண்டும் என்று அற்புதமாக விளக்கிப் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்கு அரங்கமே கைதட்டி மகிழ்ந்துள்ளது.