குலசை தசரா திருவிழாவும் அஷ்ட காளி தரிசனமும்! 

 

குலசை தசரா திருவிழாவும் அஷ்ட காளி தரிசனமும்! 

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மிகவும் சிறப்பாக இன்று இரவு நடைபெற உள்ளது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் அஷ்ட காளிகளையும் தரிசனம் செய்ய இருப்பதால் விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் சேர்ந்து செய்து வருகின்றனர்.

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டு தோறும் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டிற்கான தசராவிழா இன்று இரவு நடை பெறவுள்ளது .இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாகத் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில்தான் தசரா திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

kulasaijk

பாண்டிய மன்னர்கள் முத்துகளைக் குவியலாகக் குவித்து வணங்கியதாலும், முத்துகளில் இருந்து உதித்ததால் ’முத்தாரம்மன்’ எனவும் அம்பாளின் திருநாமத்துக்கு பெயர்க்காரணம் சொல்லப்படுகிறது. 

உடலில் போடப்பட்ட முத்துகளை அம்பாள் ஆற்றினாள் (நீக்கினாள்) என்பதால், முத்து ஆற்று அம்மன், முத்தாற்றாம்மன் என அழைக்கப்பட்டு நாளடைவில், அதுவே மருவி `முத்தாரம்மன்’ என அழைக்கப்பட்டதாகவும், பின்னர் இங்கு கோயில் எழுப்பி வழிபட்டு வருவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். 

சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர், அம்பாள் முத்தாரம்மன் ஒரே பீடத்தில் எழுந்தருளி காட்சி அளிப்பதை இங்கு மட்டுமே காண முடிகிறது. மகிஷாசூரனின் அட்டகாசங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அம்பிகை அழித்தநாள்தான் தசராத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

kulasaai

இதே ஊரில் முத்தாரம்மன் கோயிலைச் சுற்றியே வீரகாளியம்மன், பத்திரகாளியம்மன்,முப்பிடாரி அம்மன்,  கருங்காளியம்மன்,முத்தாரம்மன், உச்சினிமாகாளியம்மன், மூன்றுமுகம் கொண்ட அம்மன், வண்டி மறித்த அம்மன் என எட்டு அம்மன் கோயில்கள் அமைந்துள்ளது.

பொதுவாக காளி அம்சம் உள்ள சகோதரிகளை அஷ்ட காளிகள் என்பார்கள். இந்த 8 கோயில்களில் உள்ள அம்மன்களையும் அஷ்ட காளி கோயில்கள் என்றே அழைக்கிறார்கள்.

kulasaai

திருமண பாக்கியம், குழந்தை வரம், கடன் பிரச்னை, கல்வி, வியாபர அபிவிருத்தி, உடல் வியாதிகள், மனக்குழப்பம், சொத்துப் பிரச்னை என ஒவ்வொரு காளியும் ஒவ்வொரு வரம் அருளும் நாயகிகளாக வீற்றுள்ளார்கள். குலசைக்கு வரும் பக்தர்கள் முத்தாரம்மனை தரிசனம் செய்துவிட்டு இந்த எட்டுக் காளிகளையும் தரிசனம் செய்து வளம் பெறலாம்!