குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

 

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

தமிழகத்தில் பிரசித்திபெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தசரா  திருவிழாவின் முதல் நாளான நேற்று  காலை 11 மணிக்கு காளி பூஜையும் ,மதியம் 12 மணிக்கு  அன்னதானமும் மாலை 4 மணிக்கு மகுட இசையும் 5 மணிக்கு  சகஸ்ரநாம அர்ச்சனையும்  6 மணிக்கு  கரகாட்டமும் இரவு 7 மணிக்கு வில்லிசையும் 8 மணிக்கு பக்தி இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

 

kulasai

இரண்டாவது நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம்  வீதி உலா நடைபெற்றது. அதனையடுத்து காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. 

காலை  9  மணிக்கு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.இதனை அடுத்து நேர்த்திக்கடனாக பல்வேறு நாட்கள் விரதம் இருந்து காளி வேடம் அணியும் பக்தர்களுக்கு கோயில் பூசாரி காப்பு அணிவிப்பார். 

kulasaihjk

காப்பு அணிவிக்கப்பட்ட  பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு சென்று,அங்குள்ள கோயில் அருகில் தசரா பிறையில் தங்கி விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு காப்பு அணிவிப்பார்கள்.

காப்பு அணிவிக்கப்பட்ட  பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று,காணிக்கை வசூல் செய்து 10 ஆம் நாள் இரவில் கோயிலில் வழங்குவார்கள்.

தசரா திருவிழாவின்  சிகர நிகழ்ச்சியான 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு  மகி‌ஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது . 

kulasaihjk

11 ஆம் நாளான  20 ஆம் தேதி  சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு அம்மன் தேரில் பவனி வருதல் நிகழ்ச்சியும்  மாலை  4.30  மணிக்கு  காப்பு  களைதல் நிகழ்வும் இரவு 12 மணிக்கு சேர்க்கை  அபிஷேகமும்  நடைபெறுகிறது . 

12 ஆம்  நாளான   21 ஆம்  தேதி ஞாயிற்றுக்கிழமை  காலையில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையுடன்  தசரா  திருவிழா  நிறைவு பெறுகிறது.விழா நாட்களில்  தினமும்  காலை முதல் இரவு  வரையிலும்  சிறப்பு வழிபாடுகள்  நடைபெறுகிறது.

தினமும் இரவு 9 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலங்களில் அம்மன் எழுந்தருளி,வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.