குற்றால அருவியில் தொடரும் மரணங்கள்: மூச்சு திணறி ஒருவர் பரிதாப பலி!

 

குற்றால அருவியில் தொடரும் மரணங்கள்: மூச்சு திணறி ஒருவர் பரிதாப பலி!

ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகத்  தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

தென்காசி : குற்றால அருவியில் குளிக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில வாரங்களாக வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை தடைவிதிக்கப்பட்டது. தற்போது தண்ணீர் வரத்து சற்று குறைந்துள்ளதால் நேற்று மாலை முதல் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

kutralam

இந்நிலையில் கும்பகோணம் பாலகரையைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் தனது மனைவியுடன் நேற்றிரவு குற்றாலம் வந்துள்ளார். இன்று காலை 8 மணிக்கு குற்றாலம் மெயின் அருவியில் குளித்தபோது  ராமலிங்கத்துக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.இதனால் அருவியை விட்டு வெளியே வரமுடியாமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகத்  தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

kutralam

ஏற்கனவே குற்றாலம் மெயினருவியில் மதுரையை சேர்ந்த சூரிய நாராயணன் என்ற இளைஞரும்,  சிற்றருவியில் கர்ப்பிணிப் பெண் காளிஸ்வரி என்பவரும் உயிரிழந்தனர். இதே போல்  நீரில் பாறாங்கற்கள் அடித்து   வரப்பட்டுக் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தன. இதில் 3 பேர் தலையில் காயம் ஏற்பட்டது. 

குற்றால அருவி அருகில் எந்த முதலுதவி, ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவ வசதிகள் இல்லாத நிலை தொடர்ந்து  வருவதால் பாதிக்கப்படுபவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.